பிகேஆரின் திட்டத்தைக் கெடுக்கவே ஜைட் காஜாங்கில் போட்டியிடுகிறாராம்

1 zaidகாஜாங்  இடைத்  தேர்தலில்  தாம்  வெற்றிபெற்றால்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசாராக   தொடர்வது  உறுதி  என  முன்னாள்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம் இன்று  செய்தியாளர்  கூட்டம்  ஒன்றில்  கூறினார். 

அன்வார்  சட்டமன்ற  உறுப்பினரானால் அவர்   காலிட்டை  மந்திரி  புசார் பதவியிலிருந்து  வெளியேற்ற  முயல்வார்  என்றாரவர்.

காலிட்டும்  அவரது  அரசும்  மக்களின்  அதிகாரத்தைப்  பெற்றுத்தான்  ஆட்சி  செய்கிறார்கள்.  மக்களிடம்  அவர்கள்  பெற்ற  நம்பிக்கையை  அரசியல்  விளையாட்டின் வழி  அகற்ற  முனைவது  முறையல்ல  என்றவர்  சொன்னார்.

“காலிட்டையும்  அவரின்  குழுவினரையும்  அகற்றுவதாக  இருந்தால் ஜனநாயக  முறைப்படியே  செய்ய  வேண்டும்.  அவரிடம் பலவீனம்  இருக்குமானால்  அல்லது எதிலும்  தோல்வி  கண்டிருந்தால்  அதை வெளிப்படையாக  பேசித்  தீர்வு  காணலாம். 

“சுல்தானின்  அனுமதியுடன்  அதைச்  செய்யலாம். ஒரு  பொறுப்பான  தலைமைத்துவம் அப்படி  வெளிப்படையாக  நடந்துகொள்வதைத்தான்  21-ஆம்  நூற்றாண்டு  மக்களும்  எதிர்பார்க்கிறார்கள்”. 

இதையெல்லாம்  கருத்தில்  கொண்டு,  ஆரோக்கியமான  ஜனநாயக்  கோட்பாடுகளுக்கு  மதிப்பளிக்கும்  வகையிலும்  அரசியல்  நிலைத்தன்மையை  உறுதிப்படுத்தவும்  அன்வாரை  மந்திரி  புசாராக்கும்  பிகேஆரின்  திட்டத்தை  சிலாங்கூர்  வாக்காளர்  முறியடிக்க  வேண்டும்  என  ஜைட்  கேட்டுக்கொண்டார்.