“இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே”

 

Gunaraj1இந்த நாட்டில் இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை அழித்து நாடாக்கிய இந்தியர்களுக்கு இன்று அவர்களுடைய இறுதி உறைவிடமான இடுகாட்டிலும் நிம்மதி இல்லையே என்று கம்போங் பாரு குண்டாங் வாழ் இந்தியர்கள் குமுறுகின்றனர்.

லாதார் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் குண்டாங் வழியாக ஒரு சாலையை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அங்குள்ள இந்துக்களின் இடுகாட்டு நிலம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சாலையை விரிவுபடுத்துவதற்காக சாலையை ஒட்டியுள்ள இடுகாட்டின் ஒரு பகுதியில் இடுகாட்டிற்குச் சொந்தமான நிலத்தை ஒட்டியுள்ள மண்ணை வெட்டி எடுத்து விட்டனர். இதனால், மழைகாலத்தில் இடுகாட்டு நிலம் சரிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது என்று குண்டாங் இந்து சமூக மயான மன்றத்தின் தலைவரான பி. கண்ணியப்பன் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.

கடந்த 35 ஆண்டுகளாக சுமார் 2 ஏக்கர் அளவிலான அந்த இடுகாடு அங்கு இருந்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியில் செம்பனை மரங்கள் நடப்பட்டிருப்பதாகவும் கூறிய கண்ணியப்பன், அந்த மரங்களை நட்ட நிறுவனம் தங்களுடைய அனுமதியைப் பெறவில்லை என்றார்.

அவ்வாறே, சாலையை விரிவுபடுத்துவதற்காக இடுகாட்டு நிலத்தை சுரண்டி எடுத்த லாத்தார் நெடுஞ்சாலை நிறுவனமும் இந்த இடுகாட்டை பராமரித்து வரும் தங்களுடைய அமைப்புடன் பேச்சு ஏதும் நடத்தவில்லை என்றாரவர்.

மேலும், நில இலாகாவும் இடுகாட்டை சுற்றியுள்ள நிலத்தை லாத்தார் பயன்படுத்தவிருப்பது பற்றி தங்களுடைய குழுவிடம் எதுவும் பேசவில்லை என்று அவர் கூறினார்.

இடுகாட்டு நிலத்திற்கு மிக அருகாமையில் லாத்தார் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மழைகாலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதால், லாத்தார் நிறுவனம் இடுகாட்டிற்கு அருகில் அது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதோடு இந்த இடுகாட்டு நிலத்தைச் சுற்றி மண் சரிவை தடுக்கும் சுவர் எழுப்பவதற்காக தங்களுடைய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த லாத்தார் முன்வர வேண்டும் என்று கண்ணியப்பன் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், இடுகாட்டிற்கு செல்லும் தற்போதைய சாலையும் செப்பனிடப்பட வேண்டும் என்றாரவர்.

இடுகாட்டிற்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து இங்குள்ளவர்கள் எழுப்பிய எதிர்ப்புகளின் காரணமாக நான்கு மாதங்களுக்கு லாத்தார் நிறுவனம் அதன் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு அந்நிறுவனம் அதன் நடவடிக்கையை மீண்டும் துவக்கியுள்ளது என்று கண்ணியப்பன் தெரிவித்தார்.

கம்போங் பாரு குண்டாங் இந்து மயானம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து உருப்படியான நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த கண்ணியப்பன், “நாங்கள் பலரிடம் பேசியுள்ளோம். இறுதியில், செலயாங் நகராட்சி மன்றத்திற்கு நவம்பர் 7, 2013 இல் ஒரு கடிதம் அனுப்பினோம். எதுவும் முறைப்படி நகருவதாக இல்லை”, என்றார்.

“கம்போங் பாரு குண்டாங் இந்து மயானம் நாட்டில் காணப்படும் இதர பல இந்து மயானங்களைப்போல் அனாதை மயானமாக காட்சியளிக்கிறது. செடி கொடிகள் மண்டிக்கிடக்கின்றன. கீழே உறங்கிக்கொண்டிருப்பவர்களின் நிம்மதியை கெடுப்பதற்கென்றே அதைச் சுற்றி குழிபறிக்கும் வேலை வேறு நடந்து வருகிறது. இது தொடர்ந்தால், இடுகாட்டு இந்துக்களும் காணாமல் போய்விடுவார்கள் என்று நிச்சயமாக கூறலாம். இப்பகுதியில் வாழும் மக்களும் இப்பகுதியை ஆளும் நகராண்மைக்கழகத்தில் இருப்பவர்களும் என்ன செய்யப் போகிறீர்கள்?”

கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு “நாங்கள் இதை விடப்போவதில்லை. கண்டிப்பாக எதிர்த்துப் போராடுவோம்” என்று உரக்க கூறிய வேளையில், செயலாங் நகராண்மை கழக உறுப்பினர் ஜி. குணராஜ், இந்து மயானங்கள் எதிர்கொண்டுள்ள நில மற்றும் பராமரிப்பு விவகாரங்களுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டுமென்றால் அதற்கு அங்கங்கே உள்ள ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டும். நாட்டிற்காக எத்தனையோ தியாங்களைச் செய்த இந்தியர்களின் மயானத்தை முறையாகப் பாதுகாக்கும் கடப்பாட்டை ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியாகக் கூறினார்.

“முதல் கட்ட நடவடிக்கையாக, ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றங்கள் இந்து மயான பட்டியலை தயாரித்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாமிய கல்லறைகளுக்கு அளிக்கப்படும் அனைத்து பாதுகாப்பும் பராமரிப்பும் போல் இந்து மயானங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

“பெரும்பாலான இந்து மயானங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக சீரழிக்கப்படுகின்றன. இது கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.

“இந்து மயானங்களுக்கான நிலத்தை அரசு ஏட்டில் பதிவு (கெஜட்) செய்துவிட்டால் மட்டும் போதாது. அதை பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இது ஏதோ பிச்சை போடுவதாக கருதப்படக்கூடாது. நமக்காவும் நாட்டிற்காகவும் உழைத்த உடலுக்கு நாம் காட்டும் மரியாதையை இது பிரதிபலிக்க வேண்டும்.

“மயானம் ஒன்றை பராமரிப்பது ஒரு சாதரணமான காரியமல்ல என்பதை இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவர். அறிந்திருந்தும் இந்து மயானத்தை புறந்தள்ளுவது முறையல்ல.

“ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற எல்லைக்குள் உடல் தகனம் செய்வதற்கான மின்சுடலை  இருக்க வேண்டும்.  சுபாங் ஜெயாவில் அந்த நகராட்சி கழகத்தின் [முன்னாள்] உறுப்பினர் கா. ஆறுமுகம் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக அங்கு மின்சுடலை கட்டப்பட்டுள்ளது. செயலாங்கில் அப்படி ஒன்று இல்லை.

“சிலாங்கூர் மாநில அரசு இந்த விவகாரம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மயான விவகாரங்களை கவனிப்பதற்காக தனி இலாகா ஒன்று அமைப்பதற்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்”, என்று பிகேஆர் செயலாங் நகராண்மைக் கழக உறுப்பினரான ஜி. குணராஜ் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.