தீமை பயக்கும் கட்டுரை வெளியிட்ட உத்துசானுக்கு எதிராக நடவடிக்கை தேவை

limஅதன்  வார இறுதிப்  பதிப்பின்  முதல்  பக்கத்தில்  “பொய்யான  ஒரு  கட்டுரையை”  வெளியிட்டிருந்ததற்காக  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியாவுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படாதது  என்  என்று  டிஏபி  நாடாளுமன்ற  தலைவர்  லிம்  கிட்  சியாங்  வினவியுள்ளார்.

‘Melayu, Islam dihina di Tanah Melayu’ (தானா  மலாயுவில்  மலாய்க்காரர்களையும்  இஸ்லாத்தையும்  இழிவுபடுத்தும்  செயல்கள்)  என்ற  தலைப்பில்  வெளியிடப்பட்டிருந்த  அக்கட்டுரை,  டிஏபி ‘கிறிஸ்துவ  மலேசியாவை,  மலாய்க்காரரையும்  இஸ்லாத்தையும்  ஆட்சியாளர்களையும்  எதிர்க்கும்  மலேசியாவை  உருவாக்க  முயல்வதாகக்  கூறிக்கொண்டது.

மலாய்க்காரர்- அல்லாதார்,  மலாய்க்காரர்களை  மதிப்பதில்லை  எனக்  கட்டுரையை  எழுதியவரும்  அந்நாளேட்டின்  துணை  செய்தி  ஆசிரியருமான  அஸ்மான்  அனுவார்  அதில்  குறிப்பிட்டிருந்தார்.

“ஏன்  இப்படி?  அதிகம்  விட்டுக்கொடுத்து  விட்டோமா, அல்லது மலாய்க்காரையும்  இஸ்லாத்தையும்  இழிவுபடுத்துவோருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க  அஞ்சுகிறோமா?”,  என்றவர்  எழுதி  இருந்தார்.

நெருப்புடன்  விளையாட  வேண்டாம்,  “குளவிகள் அவற்றின்  கூட்டைப்  பாதுகாக்க  எந்த  நேரத்திலும்  திருப்பித்  தாக்கலாம்”  என்றும்  அஸ்மான்  மலாய்க்காரர்- அல்லாதாருக்கு  எச்சரிக்கை  விடுத்தார். 

போலீசும்  சட்டத்துறைத்  தலைவரும்  இதற்கெதிராக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என   லிம்  கேட்டுக்கொண்டார்.