போலீஸ் நடவடிக்கை இல்லை என்பதால் பதற்றநிலை மோசமடைகிறது

barathiஅண்மைய  மாதங்களில்  இன,   சமய  விவகாரங்கள் மீதான  வாத  பிரதிவாதங்கள்  மிகுந்து  வருகின்றன. அரசியல்வாதிகளே  அதற்குக்   காரணம்  எனப்   பார்வையாளர்கள்  குறைகூறுகின்றனர். 

இதில்  முக்கிய  குற்றவாளி  அம்னோ  என்றும்  அது  மலாய்/முஸ்லிம்  ஆதரவைப்  பிடித்துவைத்துக்கொள்ள  அவ்விவகாரங்களைத்  தொடர்ந்து  கிண்டிக்  கிளறி  விடுவதாகவும்  அவர்களில்  சிலர்  குற்றம்  சாட்டுகின்றனர். 

இவ்விவகாரங்களைக்  கையாள்வதில்  போலீஸ்  இரட்டை  நியாயத்தைக்  கடைப்பிடிப்பதாக  இந்திய  என்ஜிஓ  கூட்டமைப்பான  மலேசிய  இந்தியர் முற்போக்குச்  சங்க (மிபாஸ்)ச்  செயலாளர்  எஸ். பாரதிதாசன்  சாடினார்.

இன,  சமய  உணர்வுகளைத்  தூண்டிவிடுவோருக்கு  எதிராக  பாதுகாப்புக்  குற்ற (சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டம் 2012-இன்கீழ்  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  எச்சரித்திருப்பதற்கு  எதிர்வினையாக  அவர்  இவ்வாறு  கூறினார். 

“இன, சமய  பதற்றநிலையைக்  கிளறி விட்டு  சினமூட்டும்  வகையில்  நடந்துகொள்ளும்  அம்னோ/பிஎன்  தலைவர்களுக்கும்  அரசாங்க- ஆதரவு  என்ஜிஓ-களுக்கும்  எதிராக  இன்றுவரை,    எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படாதது  ஏன்?”,  என்று  பாரதிதாசன்  வினவினார்.

போலீஸ்  நடவடிக்கை  எடுக்கத்  தயங்குவதுதான்  அமைதியைக்  கெடுக்கும்  இப்படிப்பட்ட  நிகழ்வுகள்  திரும்பத்  திரும்ப  நடப்பதற்குக்  காரணமாகும்  என்றாரவர்.