பணம் இல்லாமல் வேலை செய்த அனுபவம் உண்டா? கெஜே-க்கு வேதா பதிலடி

1 vedaமுன்னாள்  செனட்டரும்  துணை  அமைச்சருமான  பி.வேதமூர்த்தி,  மலேசிய  இண்ட்ராப்  சங்கத்தின்  ஆதங்கம்  புரியாமல்  பிரதமருக்கு  ஆதரவாக  அறிக்கை  விட்டிருக்கிறார்  கைரி  ஜமாலுடின் எனச்  சாடியுள்ளார். 

தாம்  செம்மையாக  பணி  புரியவில்லை  என்றும்  பணமே  குறியாக   இருந்ததாகவும்  கைரி  கூறியதற்கு  எதிர்வினையாற்றிய  வேதமூர்த்தி,  கைரியின்  அமைச்சுக்கு  நிதி  ஒதுக்கீடு  செய்யப்படவில்லை  என்றால்  அவரால்  இளைஞர், விளையாட்டு  அமைச்சரின்  பணிகளைச்  செய்ய  இயலுமா  என்று  வினவினார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  இந்திய   ஏழைகளுக்கு  உதவ  50-பேரடங்கிய  சிறப்புப்  பிரிவு  ஒன்றை  அமைக்க  முதலில்  ஒப்புக்கொண்டார்  என வேதமூர்த்தி  கூறினார்.

“அப்பிரிவுக்கு அதன்   இலக்குகளை  அடைய  சிறப்பு  ஒதுக்கீடும்  சுய-அதிகாரமும்  வழங்கப்படும்  என்றும் கூறப்பட்டது.

“ஆனால்,  எட்டு  மாதங்களுக்குப்  பிறகு பிரதமர்  அப்பிரிவை  அமைக்கவும்  இல்லை,  நிதி  ஒதுக்கீடு  செய்யவுமில்லை.  அதற்கான  அரசியல்  விருப்பம்  அவருக்கு  இல்லை  என்பது  தெளிவாக  தெரிந்தது”,  என்றவர்  சொன்னார்.  

மற்ற அமைச்சுகள்  இந்திய  ஏழைகளுக்குச்  செய்ய  வேண்டியதைச்  செய்யத்  தவறியதால்தான்   அவர்களுக்கு  உதவ  ஒரு  சிறப்புப்  பிரிவு  தேவைப்பட்டது  என  வேதமூர்த்தி  மேலும்  சொன்னார்.