கர்பால் அரச நிந்தனை குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு

1 karpalஐந்தாண்டுகளுக்குமுன்,  பேராக்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  முகம்மட்  நிஜார்  ஜமாலுடின்  அகற்றப்பட்ட  விவகாரத்தில் சுல்தான்  அஸ்லான்  ஷாவுக்கு  எதிராக  டிஏபி  தலைவர்  கர்பால்  சிங்  தெரிவித்த  கருத்து  அரச  நிந்தனைக்குரியதுதான்  என  உயர்  நீதிமன்றம்  இன்று  தீர்ப்பளித்தது.

இக்குற்றத்துக்காக கர்பாலுக்கு  ஐந்தாண்டுக்கு  மேற்போகாத  சிறைத்தண்டனை  அல்லது  ரிம5,000-க்கு  மேற்போகாத  அபராதம்  விதிக்கப்படலாம்.  அவ்வாறு  தண்டனை  விதிக்கப்பட்டால்  அவர்  நாடாளுமன்ற  இடத்தை  இழக்க  நேரும்.

நீதிமன்றத்துக்கு  வெளியில் செய்தியாளர்களைச்  சந்தித்த  கர்பால், “நீதிமன்றத்  தீர்ப்பை  ஏற்கிறோம்.   ஆனால், மேல்முறையீடு  செய்வோம்”,  என்றார்.

பின்னர்  அப்படியே  அருகில்  இருந்த  டிஏபி  ஆலோசகரும்  நீண்டகால  சகாவுமான  லிம்  கிட்  சியாங்  பக்கமாக  திரும்பி, “இது  நமக்குப்  புதுசு  இல்லையே”,  என்று  புன்சிரிப்புடன்   கூறினார்.

2010-இல், இவ்வழக்கு  விசாரணைக்கு  வந்தபோது உயர்  நீதிமன்றம்  கர்பாலை  எதிர்வாதம்  செய்ய  அழைக்காமலேயே  வழக்கைத்  தள்ளுபடி  செய்தது.

பின்னர்,  2012, ஜனவரி 30-இல்  முறையீட்டு  நீதிமன்றம்  அத்தீர்ப்பை  மாற்றி  வழக்கை   விசாரணைக்காக  உயர்  நிதிமன்றத்துக்கே  திருப்பி  அனுப்பியது.