இந்தியர்களை இழிவுபடுத்துவதை நிறுத்துவீர்

1 kalaiஅம்னோ  அமைச்சர்களும்  அவர்களின்  ‘தலையாட்டி  பொம்மைகளான’  மஇகா-வினரும் இண்ட்ராபுடன்  செய்துகொண்ட  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில்(எம்ஓயு)  அளிக்கப்பட்ட  வாக்குறுதிகளை  நிறைவேற்றத்  தவறியதற்கு  “மிக  அபத்தமான  சாக்குபோக்குகள்”  சொல்லி  இந்தியர்களின்  அறிவுத்திறத்தை  இழிவுபடுத்துவதை  நிறுத்த  வேண்டும்.

அம்னோ  அமைச்சர்களும் மஇகாவினரும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தற்காப்பதற்காக  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தியை  சரமாரியாக  தாக்கி  வருகிறார்கள்  என  பினாங்கு  இண்ட்ராப்  தலைவர்  கே.கலைச்செல்வம்  இன்று  கூறினார்.

வேதமூர்த்தியைக்  குறைகூறுவோர்  ஏழை  இந்தியர்களுக்கு  இழைக்கப்பட்ட  “மிகப்  பெரிய  துரோகச்செயலை”  மறைத்து அது பற்றி  கட்டுக்கதைகளை  அள்ளி  விடுவதை  நிறுத்திக்கொண்டு  இண்ட்ராப்  முன்வைக்கும்  கேள்விகளுக்கு  ஆதாரங்களோடு  பதில்  சொல்ல  வேண்டும்  எனக்  கலைச்செல்வன்  வலியுறுத்தினார்.

எம்ஓயு-வில் ஒப்புக்கொண்டபடி  இந்தியர்  விவகாரங்களுக்காக  ஏன்  புதிதாக  ஒரு  பிரிவு  அமைக்கப்படவில்லை?

ஏழை  இந்தியர்களின்  சமூக-பொருளாதார  திட்டங்களுக்கு எம்ஓயு-வில்  ஒப்புக்கொள்ளப்படி  ஏன்  நிதிஒதுக்கீடு  செய்யப்படவில்லை?

வாக்குறுதிகளை  நிறைவேற்றும் அரசியல்  விருப்பமோ  தார்மீகப்  பண்போ  இல்லாத  நிலையில்  நஜிப்பும்  பிஎன்னும்  எதற்காக எம்ஓயு-வில்  கையெழுத்திட  வேண்டும்?

“நஜிப்பும்  பிஎன்னும்  எம்ஓயு-வைக்  காண்பித்து  இந்தியர்களை  ஏமாற்றி  பிஎன்னுக்கு  வாக்களிக்க  வைத்தது  ஏன்? இது  மிகப்  பெரிய  நம்பிக்கைத்  துரோகமில்லையா?”,  எனவும்  கலைச்செல்வன்  வினவினார்.