எஸ்எம்கே புலாவ் கேரி இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர் காலணியால் அடிக்கப்பட்டார்

 

MALAYSIA-VOTE-INDIANSதமிழ் மாணவர்கள் இழிவான முறையில் ஆசிரியர்களால் கண்டிக்கப்படுவது இப்போதெல்லாம் ஒரு வழக்கமான பாணியாக இருக்கிறது.

 

அதற்கேற்ப, கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரித் தீவு இடைநிலை பள்ளியில் 2 ஆம் படிவ தமிழ் மாணவர் ஒருவர் அங்குள்ள மலாய் ஆசிரியரால் காலணியால் தாக்கப்பட்ட சம்பவத்தை மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. அ. கலைமுகிலன் கடுமையாக கண்டித்தார்.

 

இச்சம்பவத்தை அறிந்த மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும், இதர தமிழ் அமைப்புகளும் களத்தில் இறங்கினர். அத்தீவுக்குள்ளேயே இப்பிரச்சனையைச் சமாதானப்படுத்தி விடலாம் என்ற சிலரின் முயற்சி நிராகரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

 

பாட நேரத்தில் முறையாக கவனம் செலுத்தாத காரணத்தினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தன்னை காலணியால் அடித்ததாக பாதிக்கபட்ட மாணவன் தன்னிடம் கூறியதாக கலைமுகிலன் கூறினார்.

 

மாணவர்களைக் கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உண்டு என்ற   உண்மையை தாம் மறுக்கவில்லை. ஆனால், அதற்கான முறை உள்ளது.  இப்படி காலணியால் மாணவர்களை அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், இந்த மாணவனை அடித்தது வேண்டுமென்றே மலேசியா தமிழர்களின் தன்மானத்தை உரசி பார்ப்பது போல் உள்ளதாக கலைமுகிலன் தெரிவித்தார்.

 

மாணவர்களின் நலனையும் உரிமையையும் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் இந்தப் பிரச்சனையைக் கடுமையாக கருதுவதாக அவர்  குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் வருகை தந்தனர்.

 

பள்ளி நிர்வாகத்திடம் இதைப் பற்றி விவாதிக்கும் பொழுது, சம்பத்தபட்ட ஆசிரியர் மீது இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், இதைப் பள்ளிக்குள்ளேயே முடித்து கொண்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

 

மன்னிப்பு என்றால், யார் வேண்டுமானாலும் எந்தத் தவறையும் செய்து விட்டு ”மன்னிப்பு” என்று எளிதாக கூறிவிடலாம்.

 

ஆனால்,  நமக்கு வேண்டியது சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிரான கட்டொழுங்கு நடவடிக்கையே தவிர அவரிடமிருந்து மன்னிப்பு கோருவதில்லை என்று திட்டவட்டமாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கலைமுகிலன் கூறினார்.

 

மேலும், இந்தப் பிரச்சனையை நாங்கள் எளிதாக எண்ணி விடமுடியாது. காரணம், இது சம்பந்தபட்ட மாணவரின் தனிப்பட்டபிரச்சினை மட்டுமல்ல.  மாறாக, இது இந்நாட்டு தமிழர்களின் பொதுப் பிரச்சனையாக இருக்கிறது என்றாரவர்.

 

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே அநாகரிகமாக நடந்து கொள்வது சரிதான என்று நிர்வாகத்திடம் கேட்கப்பட்டது.

 

பொது அமைப்புகள் கொடுத்த அழுத்தத்திற்குப் பின்னர், சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். எதிர்வரும் வியாழக்கிழமை அவர்களுடன் மீண்டும் ஒரு சந்திப்பு நடத்தப்படும் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கம் அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை கல்வி அமைச்சுக்கும், மாவட்ட கல்வித்துறைக்கும் அனுப்பும் என்றும் அவர் கூறினார்.

 

தீர்வு பிறக்காவிட்டால், அடுத்த கட்ட செயல்பாடுகளில் இறங்குவோம் என்று  பள்ளி நிர்வாகத்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்தோம் என்றும் கலைமுகிலன் கூறினார்.