எம்.ஐ.இடி, எய்ம்ஸ்ட் சாமிவேலுவின் சொத்தா? அப்படி இல்லையே!

kulasegaranமு. குலசேகரன், பெப்ரவரி 27, 2014

2000 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எம்.ஐ.டி கல்வித்திட்டம் அப்போதைய ம.இ.காவின் தலைவரால் பெரும் ஆரவாரத்துடன் இந்திய மாணவர்களின்  கல்வி  நலன் கருதி ம.இ.காவின் பெரும் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பலனாக எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டது.

அதற்கு நிதி திரட்ட ச. சாமிவேலு நாடு முழுவதும் பயணம்  செய்து எல்லா ம.இ.கா கிளைகளும் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டுமென்று  கட்டாயப்படுத்தி  வசூல்  செய்தார்.

தனி நபர்களும் பொது மக்களும் தங்களால் இயன்றதை கல்வியின்பால் அக்கறைக் கொண்டு  சாமிவேலுவிடம் வழங்கினார்கள். எதிர்கட்சியைச் சார்ந்த இந்தியர்கள் நேரடியாக பொருளுதவி செய்யாவிட்டாலும் மறைமுகமாக நண்பர்கள் மூலம் கொடுத்து உதவி உள்ளனர். கெடா மாநில அரசும் இலவசமாக நிலத்தை கொடுத்து உதவியது. மத்திய  அரசாங்கமும் ஒரு கணிசமான தொகையையும் இந்திய  சமுதாய நலன் கருதி வழங்கியது.

mic_samyஅரசாங்கம்  கொடுத்த பணம் முழுவதுவதும் சாமிவேலு  என்ற தனி நபருக்காக கொடுக்கப்பட்டது அல்ல என்பதை பொது மக்கள், சாமிவேலு உட்பட, அனைவருமே அறிந்துள்ளனர். அது ம.இ.காவின் தலைவர் என்ற அடிப்படையிலும் அவர் முன்னெடுத்த திட்டம் கல்வி சார்ந்தது  என்ற அடிப்படையிலும்தான்  வழங்கப்பட்டது. அதனை நிர்வகிக்க  ம.இ.கா மத்திய செயலவையிலிருந்து  உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். அப்பொழுது ம.இ.காவின் தலைவராக பொறுப் பேற்றிருந்த சாமிவேலுவே அதற்கு தலைவராகவும்   நியமனமேற்றார்.

ம.இ.காவின் கல்விப் பிரிவின்  ஒரு விரிவாக்கமாக  அமைக்கப்பெற்ற ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இன்று ம.இ.காவிற்கும் அதற்கும்  தொடர்பின்றி தனி நபர்களின் சொத்தாக உருமாறிக் கொண்டிருக்கின்றது. சாமிவேலுவின் இரும்புக் கரத்தில் அது  சிக்கிக் கொண்டிருப்பதால், ம.இ.கா தன்னுடைய ஆளுமையின் கீழ் அதனைக் கொண்டு வர முடியாமல் தவிக்கின்றது. இதனை சமுதாயம் பார்த்துக்கொண்டு  ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது.

இந்தியர்களின் பணத்தைக் கொண்டு அரசாங்கத்தின் உதவியோடு கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகம்,  ம.இ.காவின் சொத்தாக இருந்திருக்க வேண்டுமேயன்றி சாமிவேலுவின் குடும்பச் சொத்தாக அல்ல. அது ம.இ.காவின் மத்திய செயலவை  உறுப்பினர்களைக் கொண்டுதான் சுழல் முறையில் நிர்வகிக்கப்பட  வேண்டும். அப்பொழுதுதான் அந்த நிர்வாகம்  பொது மக்களின் நலனுக்கு ஏற்றவாறு செயல்படமுடியும். இப்பொழுது இஷ்டம் போல் சாமிவேலுவின் கைப்பாவைகளைக் கொண்டு அது ஆளப்பட்டு வருகிறது. இது சமுதாய எதிர்பார்ப்புக்களுக்கும்  ஜனநாயகத்திற்கும் எதிர்மறையானது.

இதனை உடனடியாக சரி செய்ய இப்பொழுது ம.இ.காவிற்கு தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் பழனிவேலும் டாக்டர் சுப்ரமணியமும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அது இந்தியர்களின் பணத்தைக் கொண்டு இந்தியர்களுக்காக கட்டப்பட்ட பல்கலைக் கழகமானதால் அங்கு  இந்திய மாணவர்கள் பயில  சிறப்புக் கழிவுகள்  வழங்கவும் ஏற்பாடுசெய்ய வேண்டும்.

இது குறித்த விளக்கங்களை  சாமிவேலு இது வரையில் வெளியிடவில்லை. இந்த நிலைமை மேலும் நீடித்தால், அடுத்து கூடவிருக்கும் நாடாளுமன்ற தொடரில் இது குறித்து நான் கேள்வி கேட்க நேரிடும்.