அன்வார் நஜிப்புடன் சேர்கிறாரா?

anwarஅன்வார்  இப்ராகிமையும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  சேர்த்துவைக்க மிகப்  பெரிய  ஏற்பாடு  ஒன்று  கமுக்கமாக  நடைபெற்று  வருகிறதாம்.

அம்னோவுடன்  நெருக்கமான  தொடர்பு  வைத்திருக்கும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  தம்  வலைப்பதிவில்  இவ்வாறு கூறியுள்ளார்.  அன்வாரை  அமைச்சராக்கி  அவருக்கு  முக்கியமான  பொறுப்பு  கொடுக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாக  அவர்  கூறுகிறார்.

“அன்வார்  தேர்தலில்  நிற்பது  மந்திரி  புசார்  ஆவது  என்பதெல்லாம்  கவனத்தைத்  திசைதிருப்பும்  வேலைகள்”,   என்கிறாரவர்.

அன்வார்-நஜிப்  ஒன்றிணைவது  இருவருக்குமே  நன்மையாக  முடியும்.

நஜிப்பைப்  பொறுத்தவரை,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டையும்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடினையும்  எதிர்க்க  அன்வார்  பெரிதும்  உறுதுணையாக  இருப்பார்.

“பிரதமர்,  தம்  நிலையை வலுப்படுத்திக்  கொண்டு  தம்மைக்   குறைசொல்வோரை  ஒழிக்கவும்  முடியும்,  பக்காத்தானையும்  அழிக்க  முடியும்.  அன்வாரைப் பொறுத்தவரை  அமைச்சர்  என்ற  முறையில்  அதற்குண்டான  சலுகைகளையும்  பாதுகாப்புகளையும்  பெற்று  சுகபோகமாக  வாழலாம்”, என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்சின்  முன்னாள்  தலைமை  ஆசிரியரான  காடிர்  கூறினார்.

அன்வார்,  நேரடியாகவோ  மறைமுகமாகவோ  நஜிப்பைக்  குறை  சொன்னதில்லை என்றாரவர்.

இத்திட்டம்  பற்றி  ஒருவேளை  டிஏபி  எப்படியோ  தெரிந்து  வைத்திருக்கலாம்  என்றும்  காடிர்  சந்தேகப்படுகிறார்.  லிம்  கிட்  சியாங்  அவரது  வலைப்பதிவில், “தேசிய  ஒருங்கிணைப்புத்  திட்டத்தை  வரைந்தவர்  யார்,  யாரைக்  கலந்து  ஆலோசித்தார்கள்?  அது  மிகப்  பெரிய  மர்மமாக  இருக்கிறது?”,  என்று  கேள்வி  எழுப்பி  இருந்ததை  அவர்  நினைவுப்படுத்தினார்.

மேலும்,  ‘அரசியலில்  எதுவும்  சாத்தியம்’  என்று  பிரஷ்ய  அரசியல்  சாணக்கியர்  ஒட்டோ  வான்  பிஸ்மார்க்  சொல்லி  இருப்பதையும்  காடிர்  சுட்டிக்காட்டினார்.