காஜாங், பிஎன்மீதான இந்தியர்களின் கருத்துக்கணிப்பாக அமையட்டும்

vedaகாஜாங்  இடைத்  தேர்தல், இந்திய  சமூகத்துக்கு பிஎன்னின்  பங்களிப்பு  மீதான   கருத்துக்கணிப்பாக  அமைய  வேண்டும் என  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  வலியுறுத்தியுள்ளார். 

ஆளும்  கட்சி  இந்தியர்களுக்கு  உதவத்  தவறிவிட்டது  என்று  அவர்  கூறியதை  அவரின்  முன்னாள்  பிஎன் சகாக்கள்  மறுத்து  அவருக்குக்  கடும்  கண்டனம்  தெரிவித்திருப்பதை  அடுத்து  வேதமூர்த்தி  இப்படி  ஒரு  கோரிக்கையை  முன்வைத்திருக்கிறார்.

“இளைஞர்,  விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடினும்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனும்  அவர்களின்   ‘குழு  ஆட்டக்காரர்களான’ மஇகா-வினருடன்  சேர்ந்து  கடந்த  20  ஆண்டுகளில்  அரசாங்கம்  இந்தியர்களுக்கு  என்னவெல்லாம்  செய்தது  என்பதைக்  காண்பிக்கும்  முழு  அறிக்கை  தயாரிக்க  வேண்டுமாய்  கேட்டுக்கொள்கிறேன்”.

அப்படி  ஒரு  அறிக்கையைத்  தயாரித்தால்  அதுவே  காட்டிக்கொடுக்கும்  இந்திய  சமூகத்துக்காக  அவர்களும்  அவர்களின்  குழுவினரும்  இதுவரை  என்ன  செய்தார்கள்  என்பதை.

“நாட்டின் மைய  நீரோட்ட  மேம்பாட்டிலிருந்து  இந்தியர்கள் ஒதுக்கப்பட்டு  வந்திருக்கிறார்கள்  என்பதையே  இண்ட்ராப்  தொடர்ந்து  வலியுறுத்த  விரும்புகிறது”,  என  வேதமூர்த்தி  கூறினார்.

கிட்டத்தட்ட  50  ஆண்டுகளாக  இந்திய  சமூகத்துக்காகக்  குறிப்பிடத்தக்க  வகையில்  ஒதுக்கீடு  எதுவும்  செய்யப்பட்டதில்லை. அண்மைய  காலங்களில்  தேர்தல்களின்போது  மட்டும்  அவ்வப்போது  சில  இனிப்புகள்  வழங்கப்பட்டு  வந்துள்ளன  என்றாரவர்.