உயிர் வாழ்வதற்காக போராடும் பெரியக்கா சமூக பொதுநல இலாகாவிடம் கைகட்டி நிற்க வேண்டுமா?

 

Periakka-300x2851கடந்த 17 ஆண்டுகளாக பத்து ஆராங் சி. பெரியக்காவுக்கு சமூக பொதுநல இலாகாவிலிருந்து மாதாமாதம் கிடைத்து வந்த ரிம95 2013 ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் அந்த உதவித் தொகை தமக்கு மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் நவம்பர் 29, 2013 இல் முறையிட்டார். ஆனால், இன்று வரையில் அவர் எவ்வித  நிவாரணமும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

செலயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் இவ்விவகாரம் குறித்து நவம்பர் 29 தேதி அன்றே கோம்பாக் சமூக பொதுநல இலாகாவுடன் தொடர் கொண்டு பெரியக்கா பெற்று வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டது ஏன் என்று வினவியதற்கு, சம்பந்தப்பட்டவரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் உதவி பெறுபவர்கள் மீண்டும் மனு செய்ய வேண்டும் என்ற பதில் மட்டுமே கிடைத்தது.

கடந்த 17 ஆண்டுகளில் தாம் தமது விண்ணப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்ததில்லை என்பதை வலியுறுத்திய பெரியக்கா, “மே மாதம் தேர்தல் வந்தது. ஓட்டு போட்டேன். அதற்கு அவர்கள் வந்து கூட்டிக் கொண்டு போனார்கள். ஜூன் மாதத்திலிருந்து உதவித் தொகையை நிறுத்தி விட்டார்கள். எனக்கு தெரிவிக்கவும் இல்லை”, என்று விளக்கமளித்தார்.

இப்போது ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், பெரியக்காவை நேரடியாக கோம்பாக் சமூக பொதுநல இலாகாவுக்கு அழைத்து சென்று அவருக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குணராஜுக்கு கிடைத்த பதில் தம்மை அதிர்ச்சியடைய வைத்தது என்று அவர் கூறினார்.

“உடனடியாக உதவித் தொகை அளிக்க வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. அவர் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்று கூறிய அவ்விலாகா பணியாளர் தம்மிடம் நான்கு பாரங்களைத் தந்ததாக குணராஜ் தெரிவித்தார்.

“இவர் (பெரியக்காவை சுட்டிக் காட்டி) இந்த பாரங்களை பூர்த்தி செய்து பத்து ஆராங்கிலிருந்து இங்கு கொண்டு வந்து கொடுக்கக்கூடிய உடல் நிலையில் இல்லை. ஆகவே, இதற்கு ஒரு முடிவு இப்போதே தெரிய வேண்டும்”, என்று சற்று உரத்த குரலில் கூறியதைத் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரி ஒருவர் குணராஜை சந்திக்க வந்தார்.

குணராஜ் மற்றும் பெரியக்காவுடன் அவரது அறையில் பேசத் தொடங்கிய அந்த அதிகாரி, பழையபடி ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டியது விதிமுறையாகும் என்பதை வலியுறுத்தினார்.

கடந்த 17 ஆண்டுகாலத்தில் பெரியக்கா ஒரே ஒரு முறைதான் பதிவு செய்துள்ளார். இப்போது முதல்முறையாக உதவி நிறுத்தப்பட்டது ஏன்? இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று ஏன் அவரிடம் கூறப்படவில்லை? அவர் ஆண்டுதோறும் பதிவு செய்திருந்தால் அதை காட்டுங்கள் என்று குணராஜ் வலியுறுத்தினார்.

“இல்லை, ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்த பின்னர்தான்  அவர்களின் உதவி பெற தகுதியுடையவரா என்பது நிர்ணயிக்கப்படும்” என்பதை மீண்டும் கூறிய அந்த அதிகாரி, கம்பியூட்டர் பதிவுகள் எல்லாம் இப்போது இல்லை என்று மழுப்பினார்.

தொடக்கத்தில் 600 ஆக இருந்த உதவித் தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை இப்போது 6,000 க்கு கூடிவிட்டது என்றும் இதில் போலியான மனுதாரர்களும் உண்டு என்றார் அந்த அதிகாரி.

“நாங்கள் போஸ் மலேசியா மூலம் கடிதங்களை அனுப்புகிறோம்” என்ற அவர், அது போய்க்கிடைக்கிறதா என்பது தெரியாது என்றார்.

Gunarajஇவற்றை செவிமடுத்த குணராஜ், “இந்தக் கதை எல்லாம் வேண்டாம். 17 ஆண்டுகளாக உதவித் தொகை பெற்று வந்த பெரியாக்கா கடந்த 9 மாதங்களாக எவ்வித உதவியும் இன்றி அவதிப்படுகிறார். இதற்கு உடனடியாக தீர்வு காணாமல் பாரத்தை பூர்த்தி செய்து கொண்டுவருமாறு சுலபமாகக் கூறிவிட்டீர். அவர் பத்து ஆராங்கிலிருந்து இங்கு வந்து போக டாக்சி செலவு எவ்வளவு தெரியுமா? ரிம100 ஆகிறது என்று அவர் மேலும் கூறினார்.

சமூக பொதுநல உதவிக்கு மனுச் செய்பவர்கள் வயதானவர்கள், உடல் நலமற்றவர்கள். அவர்கள் உங்களைத் தேடி வர வேண்டும் என்ற தோரணையில் பாரத்தை கொடுத்து அனுப்பி விடுகிறீர்கள். இந்த அலுவலகப் பணியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏன் அதைச் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதில் கூறிய அந்த அதிகாரி, “எங்களிடம் போதுமான பணியாளர்கள் இல்லை”, என்றார்.

“இந்த அலுவலகத்தில் போதுமான பணியார்ளர்கள் இல்லை. கம்பியூட்டர் பதிவுகள் இல்லை. ஆனால், 17 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வந்த உதவித் தொகையை நிறுத்தி விட்டீர்கள். அதற்கான காரணத்தையும் உங்களால் கூற முடியவில்லை. உங்களுடைய வசதிக்காக பெரியக்காளும் அவரைப் போன்ற மற்றவர்களும் உங்களைத் தேடி வந்து கைகட்டி நிற்க வேண்டும். இதுதான் உங்களுடைய போக்கு என்பது நன்றாகத் தெரிகிறது. இப்போக்கு ஏழை மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். பெரியக்காவை போன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களை திரட்டி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்போகிறேன். அக்கூட்டத்திற்கு நீங்கள் நேரடியாக வந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்”, என்பதை வலியுறுத்திக் கூறிய செலயாங் நகராட்சி மன்ற உறுப்பினரும் பிகேஆர் பொதுநலக் குழுவின் தலைவருமான ஜி.குணராஜ், “நான் அடுத்து பெரியக்காளுடன் இங்கு வரும் போது அவரது பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்”, என்றார்.

 

 

TAGS: