3 மாதங்களில் போலீஸ் காவலில் 3 மரணங்கள்: சுவாராம் கவலை

custody2014-இன்  முதல்  மூன்று  மாதங்களில் போலீஸ் காவலில்  மூன்று  மரணங்கள்  நிகழ்ந்திருப்பது  குறித்து  சுவாரா  ரக்யாட்  மலேசியா (சுவாராம்)  கவலை  தெரிவித்துள்ளது.

ஆகக்  கடைசியாக,  மார்ச்  முதல்  நாள்  இராமசாமி  நாகு என்பார்  பாயான்  பாரு  போலீஸ்  நிலையத்தில்  ஒரு லாக்-அப்  மையத்தில் இறந்தார்  என  சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்  ஆர்.தேவராஜன்  கூறினார். அதி  நவீன  லாக்-அப்  மையம்  அது.

“போலீஸ்  காவலில்  நிகழும்  மரணங்களைக்  குறைக்கும் என்ற  நம்பிக்கையில்  கட்டப்பட்டது அந்த  அதிநவீன  மையம்  ஆனால், இராமசாமியின்  மரணம்  அந்த நம்பிக்கையைப்  பொய்யாக்கி  விட்டது”,   என  தேவராஜன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இராமசாமி  ஒரு  போதைப் பித்தர்  என்றும்  அதுவே  அவரது   இறப்புக்குக்  காரணமாக  இருக்கலாம்  என்றும்  கூறிய  பாராட்  டாயா  மாவட்ட  போலீஸ்  தலைவர்  லாய் பா  ஹின்-னையும்  அவர்  சாடினார்.

“இராமசாமியை  திருந்தாத  போதைப்பித்தர்  என்று   சித்திரிப்பதன்  மூலம்  போலீஸ்  காவலில்  வைக்கப்படுவோரைப்  பாதுகாக்கும்  பொறுப்பைக்  கைகழுவி  விட  முடியாது”, என்று  தேவராஜன்  கூறினார்.

“மேலும், இறப்புக்கான  காரணத்தை  ஒரு  மாஜிஸ்ரேட்தான்  முடிவு  செய்ய  வேண்டும்.  அது போலீசின்  வேலை
அல்ல”,  என்றும் அவர்  சொன்னார்.