யோங் பெங் தமிழ்ப்பள்ளி இடமாற்றம்: மஇகா மக்களை ஏமாற்றுகிறது

ramakrishnan3-முனைவர் எஸ். இராமகிருஷ்ணன், முன்னாள் செனட்டர், பெப்ரவரி 6, 2014.

தோட்டங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளை அருகிலுள்ள நகர்களுக்கு இடமாற்றம் செய்வது சுலபமான செயலாகவே இல்லை. அதிகாரத்திலுள்ளவர்கள் இழுபறி செய்வதோடு இடமாற்றம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை. மஇகா, “தமிழ்ப்பள்ளிகளின் பாதுகாவலர்” , தமிழ்ப்பள்ளிகளை அதன் பிடியிலிருந்து நழுவ அனுமதிப்பதே இல்லை.

பகுதி உதவி பெறும் தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் நகர்புறங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் அவை தொடர்ந்து பகுதி உதவி பெறும் பள்ளிகளாகவே இருக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகளில் நீண்ட காலமாக பணியாற்றிய தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் மஇகா மற்றும் பிஎன் ஆகியவற்றுக்கு துணையாக, பயந்தவர்களாக மற்றும் பணிந்தவர்களாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிமையானதை அவர்கள் தட்டிக் கேட்கும் துணிவு அவர்களிடம் இல்லாததால், கெஞ்சிக்கேட்கின்றனர். அவர்களுக்கு வேறுவழி ஏதும் இல்லை. தாங்கள் கேட்கும் ஒன்றுக்கு ஒப்புதல் கிடைக்கும் வரையில் அதையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியுள்ளது என்று ஒரு தலைமையாசிரியர் என்னிடம் கூறியுள்ளார்.

இப்படிப்பட்டவைகளில் ஒன்று 2009 ஆம் ஆண்டில் சைம் டார்பி பி தோட்டத்திலுள்ள யோங் பெங் தமிழ்ப்பள்ளியை தாமான் ஸ்ரீ கோட்டா நகருக்கு இடமாற்றம் செய்ய தொடங்கிய நடவடிக்கையாகும்.

இப்போது மார்ச் 2014, நிறுத்தப்பட்டுள்ள அப்பள்ளியின் நிர்மாணிப்பு பணிகள் கடந்த ஆறு மாத காலத்தில் மீண்டும் தொடங்கப்படவில்லை.

இது போன்ற தாமதங்கள் குறித்து தமிழ் நாளிதழ்களில் கேள்வி எழும்போது உள்ளூர் மஇகாவினர் அதனை மறுப்பதோடு அக்கேள்வி எழுப்பியவரை தொல்லை கொடுப்பவர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஐந்தாண்டுகளாகியும் அப்பள்ளிக்கூடம் இன்னும் கட்டி முடிக்காதது இரகசியத்திலும் ஜொகூர் மாநில மஇகாவினரின் போலி வாக்குறுதிகளிலும் புதையுண்டு கிடக்கிறது.

அப்பள்ளியை நிர்மாணித்து ஜூன் 2014 வாக்கில் மாணவர் பதிவு தொடங்கும் என்று ஜொகூர் மாநில மஇகாவினர் மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதற்கு முன்னதாக இப்படி பல நாள்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மிக அண்மைய வாக்குறுதி சாத்தியமானதா அல்லது இதுவும் தங்களுடைய தகுதியின்மையை மறைப்பதற்கான இன்னொரு வெற்று வாக்குறுதியா?

மஇகா ரிம1,841,309 திரட்ட வேண்டும்

இப்பள்ளி நிர்மாணிப்பில் தாமதம் ஏன் என்றும் அது எப்போது கட்டி முடிக்கப்படும் என்றும் ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் யோங் பெங் சட்டமன்ற உறுப்பினர் சூ பெக் சூ எழுப்பிய கேள்விக்கி பதில் அளித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் ஜாயிஸ் சார்டே இப்பள்ளி ஜூன் 2013 இல் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்; இருப்பினும் ஜூன் 2014 இல் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறினார்: இப்பள்ளியைக் கட்டுவதற்கான மதிப்பீட்டு செலவு ரிம4,161,309. அதற்கான நிதி பிரதமர்துறையிடமிருந்து ரிம2,000,000, மாநில அரசிடமிருந்து ரிம300,000 மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ரிம20,000 மாக மொத்தம் ரிம2,320,000 கிடைக்கப் பெற்றது. தேவைப்படும் மீதமுள்ள ரிம1,841,309 ஐ மஇகா திரட்டி பள்ளி நிர்மாணிப்பை முடிக்க வேண்டும். மஇகா ஆதிக்கம் செலுத்தும் அப்பள்ளியின் கட்டடக் குழு தேவைப்படும் மிச்ச தொகையை கேட்டு பிரதமர்துறைக்கு கடிதம் எழுதி பதிலுக்காக காத்திருக்கிறது. இப்பள்ளியைச் சுற்றியுள்ள இதர பள்ளிகள் முழு உதவி பெறும் பள்ளிகளாக இருக்கின்றன. ஏன் எஸ்ஆர்ஜேகே (டி) யோங் பெங் முழு உதவி பெறும் பள்ளியாக்கப்படவில்லை என்று வியப்புறுகிறேன். பள்ளி கட்டடக் குழு குத்தகையாளருக்கு இன்னும் ரிம1 மில்லியன் கொடுக்க வேண்டும். பள்ளி கட்டடம் 80 விழுக்காடு முற்றுப் பெற்றுள்ளது என்று மதிப்பிடலாம்.

ஆக, தோட்ட தமிழ்ப்பள்ளியை இடமாற்றம் செய்வதில் இத்தனை தடங்கள்களும் கடும் விதிமுறைப்பாங்குகளும் சூழ்ந்திருப்பது நடைமுறையில் மஇகாவை பிரதமரின் காலடியில் விழ வைக்கிறது. பிரதமரின் காலடியில் விழுவது அந்த அளவிற்கு பாரம்பரியமாகி விட்டது என்பதோடு ஒவ்வொன்றுக்கும் காலடியில் விழுவதை அவர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

பிரதமரும் அவரது அமைச்சர்களும் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கும் பழுது பார்ப்பதற்கும் 2009 ஆம் ஆண்டிலிருந்து ரிம580 மில்லியன் ஒதுக்கியிருப்பதாக கூறிக்கொள்கின்றனர். அப்படியானால், எஸ்ஆர்ஜேகே (டி) யோங் பெங்ஐ இடமாற்றம் செய்வதில் தாமதம் ஏன்?

இந்த அளவில், ஜூன் 2014 இல் நிர்மாணிப்பு முற்றுப் பெறும் என்பது இன்னொரு போலி வாக்குறுதிதான். புதிய தேதி எப்போது? தமிழ்ப்பள்ளிகளில் பதிவு செய்து கொண்ட குழந்தைகள் தற்போது அருகிலுள்ள சீன மற்றும் தேசியப்பள்ளிகளில் தங்களை பதிவு செய்து கொள்கின்றனர். பள்ளி நிர்மாணிப்பதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு தடவையும் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும். இது பிஎன் வேண்டுமென்றே மேற்கொண்டுள்ள திட்டமா? கொள்கைகளும் திட்டங்களும் நன்மை அளிப்பவைகளாகவே தோன்றினாலும் நடைமுறை வேறு கதையாகும்.