லாக்-அப்பில் சியா சின் லீ இறந்தது எப்படி?

1 custodyகடந்த ஆகஸ்டில் தஞ்சோங்  தோக்கொங்  போலீஸ்  நிலையத்தில் போலீஸ்  காவலில்  இருந்தபோது  இறந்து  போனார்  சியா  சின்  லீ. அவர் எந்த  லாக்-அப்பில்  இறந்தாரோ  அந்த  லாக்-அப்பைப்  பார்ப்பதற்கு  அவரின்  குடும்பத்தாருக்கும்  அவரின்  வழக்குரைஞருக்கும்  அனுமதி  வழங்கப்பட்டது.

அங்கு  சென்று பார்த்தால்  அவரது  மரணத்துக்கான  காரணம்  தெரிய  வரலாம் என்று  நினைத்தவர்களுக்கு  ஏமாற்றம்தான்  கிடைத்தது. லாக்-அப்பில்  இருக்க  வேண்டிய  பல  பொருள்கள்  அங்கு  இல்லை. தடுத்து  வைக்கப்படுபவர்களின்  பதிவேடுகூட  காணாமல்  போயிருந்தது.
இதனால், சியாவுடன் தடுத்துவைக்கப்பட்டிருந்த  மற்ற  எட்டுப்  பேரின்  அடையாளங்களை  உறுதிப்படுத்திக்கொள்ள  முடியவில்லை  என வழக்குரைஞர்  எம்.விஸ்வநாதன்  கூறினார். அந்த  எண்மரும்  சியா வழக்கில்  முக்கிய  சாட்சிகளாக  விளங்கக்  கூடியவர்கள்.

“விசித்திரமாக  இருக்கிறது. யார்  யார்  உள்ளே  இருந்தார்கள்  என்பதை அவர்களால் உறுதியாக  சொல்ல  முடியவில்லை. 5,6,7,8,9 ஆகிய  லாக்-அப்  அறைகளில் எத்தனை  பேர்  தடுத்து  வைக்கப்பட்டிருந்தார்கள்  என்பதைத்  தெரிந்துகொள்ள அந்தப் பதிவேடு  மிக மிக  அவசியம்”, என்றாரவர்.

போலீசார்  லாக்-அப்  அறைகளில்  இருந்தவர்களின்  பட்டியல்  ஒன்றை விஸ்வநாதனிடம்  கொடுத்திருக்கிறார்கள். . ஆனால்,  அப்பட்டியலில்  இருந்த“ எல்லாருமே  வெளிநாட்டவர். இப்போது  அவர்களைத்  தேடிப்  பிடிக்க  முடியாது”,  என்றவர்  சொன்னார்.

போலீஸ்  நிலையத்தில்  மற்ற  ஆவணங்களும்  முறைப்படி  வைத்திருக்கப்படவில்லை.

“எல்லாமே  காகிதங்கள்தான்.  ஒரு  புத்தகமாகக்கூட  இல்லை”,  என்றவர்  சொன்னார்.

போலீஸ் ஆவணங்களைப்  பாதுகாக்கும்  முறை  “அதிர்ச்சியளிப்பதாக”  விஸ்வநாதன்  கூறினார்.