ஐஜிபி: திருட்டுக் கடப்பிதழ்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்

1 igpஇரண்டு  ஈரானியர்கள் திருட்டுக்  கடப்பிதழ்களை  வைத்து  எம்எச்370-இல்  பயணம்  செய்தது  பற்றி  முரண்பாடான  தகவல்கள்  வந்து  கொண்டிருப்பதால்  அது  பற்றி  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்   காலிட்  அபு  பக்காரிடம்  கேட்டு  தெளிவு  பெறலாம்  என்றால்  அவரும்  கையை  விரித்து  விட்டார்.

“என்னை  ஏன்  கேட்கிறீர்கள்?  குடிநுழைவுத்  துறையைக்  கேளுங்கள், இண்டர்போலைக்  கேளுங்கள்”,  என்று  காலிட்  கூறினார்.

அவ்விரு  ஈரானியர்களும்  திருடுபோன   இத்தாலிய,  ஆஸ்ட்ரிய  கடப்பிதழ்களை  வைத்து  மலேசியாவுக்குள்  நுழைந்ததாக  குடிநுழைவுத்  துறை  கூறி  இருந்தது.

ஆனால்,  இண்டர்போல்  அவ்விருவரும் மலேசியாவுக்கு  நுழையும்போது ஈரானிய  கடப்பிதழ்களைப்  பயன்படுத்தினார்கள்  என்றும்  மார்ச் 8-இல்  சீனாவுக்குச்  செல்லும்  எம்ஏஎஸ்  விமானத்தில்  பயணம்  செய்தபோது  மட்டும்  அவர்கள்  திருட்டுக்  கடப்பிதழ்களைப்  பயன்படுத்தினார்கள்  என்றும்  அறிவித்துள்ளது.

திருட்டுக்  கடப்பிதழ்கள்  பற்றிய  செய்தி  வெளியானதை  அடுத்து  விமானம்  பயங்கரவாதத்  தாக்குதலுக்கு  இலக்காகி  இருக்குமோ  என்ற கவலை  பெருகியுள்ளது.

ஆனால், அவ்விரு  ஈரானியர்களும்  இதற்குமுன்  பயங்கரவாத  நடவடிக்கைகளில்  ஈடுபட்டவர்கள்  அல்லர்  என்பதைத்தான்  ஆய்வுகள்  காட்டுவதாக  காலிட்  கூறினார்.