இலாபத்துடன் செயல்படும் நெடுஞ்சாலைகளுக்கு இழப்பீடு கொடுப்பது ஏன்?

loke2014-இல்  சாலைக்கட்டணத்தை  உயர்த்தாமலிருப்பதற்காக  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  மிகுந்த  இலாபத்துடன்  செயல்படும்  நெடுஞ்சாலை  பராமரிப்பு  நிறுவனங்களுக்கு  மிகவும்  அதிகமான  இழப்பீட்டை  வழங்குவது  ஏன்  என்று டிஏபி  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  லோக்கிற்கு  எழுத்து  வடிவில்  வழங்கப்பட்ட  பதிலில்  அரசாங்கம்  14  நெடுஞ்சாலை  பராமரிப்பு  நிறுவனங்களுக்கு  ரிம400மில்லியன்  இழப்பீடு  வழங்குவதாகக்  கூறப்பட்டிருந்தது.

அதிகமான  இழப்பீட்டைப்  பெறுபவை  டமன்சாரா-பூச்சோங்  நெடுஞ்சாலையும் (எல்டிபி), ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையும்  ஆகும். 2014-இல்  சாலைக்கட்டணத்தை  உயர்த்தாதற்காக அவற்றுக்கு  முறையே ரிம89மில்லியனும்  ரிம72மில்லியனும் கொடுக்கப்படும்.

“இதில்  வேடிக்கை  என்னவென்றால்,   அதிகமான  போக்குவரத்தைக்  கொண்ட  நெடுஞ்சாலைகளில்  அவை  இரண்டும்  அடங்கும்  என்பதுடன்  இரண்டும்  அதிகம் இலாபம்  பெறும்  நெடுஞ்சாலைகளுமாகும்”, என்று  கூறிய  லோக், 2013-இல், எல்டிபி-இன்  வரிக்கு  முந்திய  இலாபம்  ரிம96மில்லியன்  என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

நெடுஞ்சாலை நிறுவனங்களுடன்  செய்துகொள்ளப்பட்டுள்ள  ஒப்பந்தங்கள்  ஒரு தரப்புக்கு  மட்டுமே  சாதகமாக   இருப்பதால்  அரசாங்கம்  இழப்பீடு  கொடுக்க  வேண்டிய  நிலையில்  இருக்கிறது  என்றும்,  எனவே,  ஒருதலை சார்பான  அந்த  ஒப்பந்தங்களை அரசாங்கம்  மறுஆய்வு  செய்ய  வேண்டும்  எனவும்  லோக்  கேட்டுக்கொண்டார்.