குவான் எங்கிற்கு எதிரான இந்திய என்ஜிஓக்களிண் கண்டனம்

 

Penag CM Guan Engஇந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் பல அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை பினாங்கு கோம்தாரில் கூடி “இந்தியர்களின் அவலநிலையை புறக்கணிப்பதற்காக” முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர்.

கோபிங்கோ என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இரு இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பதாகைகளை ஏந்திக் கொண்டும் தங்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை சுலோகங்களாக முழங்கிக் கொண்டும் அமைதியாக கொம்தாரை சுற்றி வந்தனர்.

மாநில அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை நாளாகும்.

அக்கண்டன கூட்டத்திற்குப் பிறகு அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான வி. நந்தகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த எதிர்ப்புக் கண்டனத்திற்கான காரணம் இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள “நீண்டகால பிரச்சனைகளைத்” தீர்ப்பதற்கு ஏற்ற அமைப்புகள் பினாங்கில் எதுவும் இல்லை என்றார்.

“நமக்கு இருக்கும் பிரதிநிதிகளுக்கு நாங்கள் எழுப்பும் பிரச்சனைகளை கேட்டறிந்து தெரிந்துகொள்வதற்கான அதிகாரங்கள் கிடையாது. பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து ஒருமித்த குரலில் பேசினாலன்றி, இந்த மாநில அரசு செவிசாய்க்காது”, என்றாரவர்.

அவர்கள் எழுப்பிய பிரச்சனைகளில் வெளியேற்றல், தோட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், தமிழ் தொடக்கப்பள்ளிகளுக்கு நிலம் இல்லாமை, பினாங்கிலுள்ள 100க்கும் கூடுதலான கோயில்களில் பெரும்பாலானவற்றுக்கு நிலம், குறைபாடுடைய மின்சுடலைகளும் சர்ச்சைக்குட்பட்ட இடுகாட்டு நிலங்களும், இந்திய ஏழைகளை புறந்தள்ளும் மாநில குடியிருப்பு கொள்கைகள், வேலை வாய்ப்புகள் மற்றும் குறைந்தபட்ச சம்பளம் ஆகியவை அடங்கும்.

“இராமசாமி ஏன் குதிக்கிறார்?”

நேற்று இக்குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட போது, மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி, மாநில முதல்வர் குவான் எங் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை புறந்தள்ளினார் என்ற இக்கூட்டத்தினரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராகக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல், மாநில அரசு இந்திய சமூகத்தின் அவலநிலையைத் தீர்ப்பதற்கு பல்வேறு முகப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கோபிங்கோ எழுப்பியுள்ள பிரச்சனைகளும் அடங்கும் என்றாரவர்.

அதற்கு பதில் அளித்த கணேசன், “எங்களுடைய இலக்கு லிம், ஏனென்றால் அவர்தான் முதல்வர், அவர் பினாங்கின் அனைத்து பிரச்சனைகளையும் மேற்பார்வை இடுகிறார். இவ்விவகாரம் குறித்து இராமசாமி ஏன் தாண்டிக் குதிக்கிறார்?”