‘சொன்னது சரியில்லைதான்; ஆனாலும், ஜுனாய்டி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை’

1 mcaஉள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  துவாங்கு  ஜாப்பார் பாலியல்  வல்லுறவு  பற்றி  வெளியிட்ட  புள்ளிவிவரங்களை  மறுஆய்வு  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டுள்ள  மசீச,  அதற்காக  அவர்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்று வலியுறுத்தாது.

பாலியல்  வல்லுறவு  பற்றிய  புகார்களில்  80 விழுக்காடு  மலாய்க்காரர்களிடமிருந்துதான்  வந்திருக்கிறது  என்றும்  மலாய்க்காரர்- அல்லாதார்  அதைப்  புகார்  செய்வதில்  அக்கறை  கொள்வதில்லை  என்றும்  ஜுனாய்டி  கூறியிருப்பது  முறையாகாது, சரியாகாது  என்று  மசீச  தலைமைச்  செயலாளர்  ஒங்  கா  சுவான்  கூறினார்.

வான்  ஜூனாய்டி  நேற்று  நாடாளுமன்றத்தில் பேசியது  பற்றிக்  கருத்துரைத்த  ஒங், தம்  கருத்துக்களைச்  சொல்லும்  உரிமை  அவருக்கு  உண்டு  என்றார்.

“நாம்  எல்லாருமே  வயதுக்கு  வந்தவர்கள்.  எம்பிகள்.  வான்  ஜுனாய்டி  அவருடைய  கருத்தைச்  சொல்லி  இருக்கிறார். என்னைக்  கேட்டால்,  ஒருவர்  சொன்ன  கருத்தை  மீட்டுக்கொள்ள  வேண்டும்  என்று  சொல்லக்  கூடாது  என்பேன்”,  என  ஒங்  கூறினார்.

முன்னதாக, மக்களவையில்  டிஏபி-இன்  கூச்சிங்  எம்பி  சொங்  சியெங்  ஜென், “இழிவான” கருத்தைச்  சொன்ன  வான்  ஜுனாய்டி  அதை  மீட்டுக்கொள்ள  வேண்டும்  என்றும்   மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்றும்  கூறி  இருந்தார்.