ஆத்திரமுற்ற சீன நாட்டவர் செய்தியாளர் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தனர்

chineseசீன நாட்டவர்  அடங்கிய ஒரு  சிறு கும்பல்,  எம்எச்370  விமானம்  பற்றி  விளக்கமளிக்கப்படும்  அரங்குக்குள் அத்துமீறி  நுழைந்து  செய்தியாளர்களிடம்  பேச  முற்பட்டதால்   அரங்கினில்  ஒரே  கூச்சலும்  குழப்பமுமாக  இருந்தது.

தங்களைக் காணாமல்போன  விமானப்  பயணிகளின்  உறவினர்கள்  என்று  கூறிக்கொண்ட  அந்த  ஒரு  டஜன்  பேரும், மலேசியாவுக்கு  அழைத்துவரப்பட்ட  தங்களுக்கு  விமானத்தைத்  தேடும்  பணி  பற்றி  அரைகுறை  தகவல்களே  தரப்படுவதால்  வேதனையும்  ஆத்திரமும்  அடைந்திருப்பதாக  தெரிவித்தனர்.

இதனிடையே,  அதிகாரி  ஒருவர்  அது  செய்தியாளர்  கூட்டத்துக்கு  உரிய  அரங்கு  என்று  அறிவித்தார். உடனே  பாதுகாப்பு  அதிகாரிகள்  விரைந்து  வந்தனர்.

செய்தியாளர்  கூட்டத்துக்குள்  நுழைந்தவர்களைப்  பக்கத்து  அறை  ஒன்றுக்கு  அழைத்துச்  சென்றனர்.  பலர்  அழுது  கொண்டும் கூச்சலிட்டவாறும்  செல்வதைக்  காண  முடிந்தது.

ஒரு  மூத்த  பெண்மணி, “நான்கு நாளாய்  இங்கிருக்கிறேன்.  என்  மகன்  எனக்குத்  திரும்பக்  கிடைக்க  தயவு  செய்து  உதவுங்கள்”,  என்று  மெண்டரின்  மொழியில் கூறியபடி  அழுதார்.