பெர்காசாவுக்கு நிதி உதவி அளிக்கும் நம்பிக்கை மன்னன் நஜிப்பின் துரோகச் செயல்

-ஜீவி காத்தையா, மார்ச் 20, 2014

பெர்காசா ஒரு மலாய் தீவிரவாத, அரசுக்கு அனுகூலமான ஓர் அரசு சார்பற்ற அமைப்பு. அதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், முன்னார்najib ஐஜிபி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி போன்றோரின் ஆதரவும் அரவணைப்பும் உண்டு. அம்மோவின் முழு ஆதரவும் உண்டு. அம்னோ பெர்காசாவை ஆதரிக்கவில்லை என்றால் அந்த அமைப்பின் துணைத் தலைவர் நோர்டின் சுல்கிப்லியை கடந்த பொதுத் தேர்தலில் ஷா அலாம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்னோ நிறுத்தி இருக்குமா? இப்ராகிம் அலிக்கு கிளாந்தானில் ஒரு நாடாளிமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்திருக்குமா?

அம்னோவுக்கு வெளியிலிருந்து அம்னோவின் இனவாத வேலைகளை பெர்காசா செய்துவருவது தெரிந்ததே.

இனவாத அம்னோ இனத் தீவிரவாத பெர்காசாவுக்கு நிதி உதவி அளித்திருக்காது என்று கூறுபவர் இந்த லோகவாசியாக இருக்க முடியாது. ஆனால், அது அம்னோவின் பணம், அம்னோவுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பது வேறு விசயம்.

ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ளக்கூடாத தகவல் அம்னோ ஆதிக்கத்திலுள்ள பாரிசான் அரசாங்கம் மலாய் இன தீவிரவாத பெர்காசாவுக்கு “ஒரு சிறிய நிதி ஒதுக்கீடு” செய்துள்ளது என்பதாகும்.

இன்று நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில் பெர்காசாவுக்கு “ஒரு சிறிய நிதி ஒதுக்கீடு” அளிக்கப்பட்டது என்று பிரதமர்துறை அமைச்சர் ஷாகிடான் காசிம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த “சிறிய நிதி ஒதுக்கீடு” எதற்கு?

இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள், தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்றெல்லாம் இன வெறுப்பை பரப்பி வரும் பெர்காசா தேசிய ஒற்றுமை மீதான கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு அளிக்கப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பெர்காசா இனவாத அமைப்புக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு!

ஒரே மலேசிய ஒரு பக்கம்; பெர்காசா மற்றொரு பக்கம். இதுதான் நஜிப்பின் நம்பிக்கை துரோகம்.

நஜிப்பும் நம்பிக்கை துரோகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இந்தியர்களே, என்னை நம்புங்கள் என்று கைகூப்பி வேண்டிக் கொண்ட நஜிப், தமிழ்க் கல்விக்கு அறக்கட்டளைகளை தேடுங்கள் என்று கூறுகிறார்.

காஜாங் இடைத் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள மஇகா தலைவர் ஜி. பழனிவேல் பாரிசான் அரசாங்கம் மட்டுமே இந்தியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இதே ஜி. பழனிவேல் மஇகா தலைவராக பதவி ஏற்ற 13 ஆவது நாளன்று இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அதில் சந்தேகமே இல்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்தியர்களை ஓரங்கட்டியதும் பாரிசான் அரசாங்கமாகத்தானே இருக்க வேண்டும். இந்தியர்களின் உரிமைகளைப் பறிக்க போர்க்குரல் எழுப்பும் பெர்காசாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதும் பாரிசான் அரசாங்கம்தானே. பாரிசான் தலைவர் யார்? இந்தியர்களுக்கு “நம்பிக்கை” மந்திரம் ஓதும் நஜிப்தானே.

உங்கள் பணத்தை எடுத்து உங்களை அழிக்க களமிறங்கியிருக்கும் பெர்காசாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நஜிப்பின் நம்பிக்கை துரோகத்தை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளலாமா?

காஜாங் வாக்காளர்களுக்கு இது ஒரு கேள்வி.

 

 

 

 

 

TAGS: