வானிலை சீரடைந்தது; தேடல் தொடர்கிறது

sarமலேசிய  விமானத்தைத்  தேடும்  பணி  தெற்கு  இந்தியப்  பெருங்கடலில்  இன்று  மீண்டும்  தொடங்கியது. 18 நாள்களுக்குமுன்  காணாமல்போன  விமானத்தின்  உடைந்த  பகுதிகள்  கிடைத்தால் அது  ஏன்  பயணப்பாதையை  விட்டு  ஆயிரக்கணக்கான  மைல்  விலகிச்  சென்றது  என்பதற்கான  மர்மம்  துலங்கும்  என்று  கருதப்படுகிறது.

 

ஆஸ்திரேலியா,  அமெரிக்கா, சீனா,  ஜப்பான்,  தென்  கொரியா முதலிய  நாடுகளைச்  சேர்ந்த  ஒரு  டஜன்  விமானங்கள்  பெர்த்துக்கு  2,500 கிமீ  (1500 மைல்) தொலைவில் உள்ள   கடல்  பகுதியில்  தேடும்  பணியை  மேற்கொண்டுள்ளன. நேற்று  வானிலை  மோசமாக  இருந்ததால்  தேடும்  பணி  கைவிடப்பட்டிருந்தது.

“இனி  எதையும்  கண்டுபிடிக்க  முடியாது  என்ற  நிலை  வரும்வரை  தேடிக்  கொண்டிருப்போம்”,  என்று  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  அப்பட்  ஆஸ்திரேலிய  நைன்  நெட்வோர்க்  தொலைக்காட்சியிடம்  இன்று  தெரிவித்தார்.

பல  பொருள்கள்  அப்பகுதியில்  மிதக்கக்  காணப்பட்டாலும்  அவற்றில்  எதுவும்  காணாமல்போன  விமானத்தினுடையது  என்று  திட்டவட்டமாக  அடையாளம்  காணப்படவில்லை.

அமெரிக்கா,  கடலுக்கடியில்  சென்று  கருப்புப்  பெட்டியைக்  கனடுபிடிக்க  உதவக்கூடிய  அதிநவீன  கருவி  ஒன்றை  அனுப்பி  வைப்பதாகக்   கூறியுள்ளது.

கருப்புப்  பெட்டியில்  விமானி  அறையில்  நடக்கும்  உரையாடல்கள், விமானத்தின்  பயணப் பாதை  முதலியவை  பதிவாகி  இருக்கும். அதிலிருந்து வரும் சமிக்ஞைகளை வைத்து  அதன்  இருப்பிடத்தைத்  தெரிந்துகொள்ளலாம்.  ஆனால்,  கிட்டத்தட்ட 30 நாட்கள் வரைதான் இந்த சமிக்ஞைகள் வரும், அதற்குள்  அதைக்  கண்டெடுக்க   வேண்டும்.