கட்டுப்பாட்டு கோபுரம் விமானத்தைத் திருப்பி அழைத்ததாக ஆகாயப் படை “நினைத்துக்கொண்டது”

rmafமார்ச் 8ஆம் நாள், மலாக்கா நீரிணைக்கு அப்பால் இராணுவ ரேடாரில் எம்எச்370 விமானத்தைக் கண்டுகொண்ட அரச மலேசிய ஆகாயப்படை (ஆர்எம்ஏஎப்) அதை இடைமறிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் இருந்துவிட்டது. சிவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்தான் அந்த விமானத்துக்குத் திரும்பி வருமாறு உத்தரவிட்டிருக்கிறது என்று ஆர்எம்ஏஎப் “நினைத்துக்கொண்டது”தான் இதற்குக் காரணமாகும்.

தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

பின்னிரவு மணி 2.40க்கு இராணுவ ரேடாரில் தென்பட்ட அவ்விமானம் எம்எச்370 என்று உடனடியாக அடையாளம் காணப்படவில்லை ஆனால், அது “பகையாளி விமானம் அன்று” என்பது மட்டும் அடையாளம் காணப்பட்டது. “நேச விமானம் ஒன்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் உத்தரவுக்கு ஏற்ப திரும்பி வருவதாக நினைத்துக் கொண்டோம்”, என்றாரவர்.