அன்வாரைத் தடுப்பதா, கூடாதா- அடினானின் தடுமாற்றம்

anwசரவாக்  முதலமைச்சர்  அடினான்  சதேம், பிகேஆர் ‘சிறு’ தலைவர்கள்  சரவாக்கினுள்  நுழைவதைத்  தடுத்து  நிறுத்தினார். ஆனால்  அதன் பெருந்  தலைவர்  அன்வார்  இப்ராகிமைத்  தடுக்கவில்லை.  இது  அரசியல் பார்வையாளர்களுக்குப்  பெரும்  வியப்பாக  இருந்தது.

மார்ச் 25-இல், பாலிங்கான்  இடைத்  தேர்தலில்  பரப்புரை  செய்வதற்காக  சென்ற  பிகேஆர்  தலைமைச்  செயலாளர் சைபுடின்  நசுத்தியோன், வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி,  உதவித்  தலைவர்  தியான்  சுவா  ஆகிய  மூவரும்  சரவாக்கில்  அடியெடுத்து  வைக்க  அனுமதிக்கப்படவில்லை.  மார்ச்  27-இல்  அங்கு  சென்ற மகளிர்  பகுதித்  தலைவர்  சுரைடா  கமருடினுக்கும்  அதே  நிலைதான்  ஏற்பட்டது.

இவர்களைத்  தடுத்து  நிறுத்திய  அடினான்,  அன்வாரை  ஏன்  தடுக்கவில்லை?

அன்வார் அனைத்துலக  அளவில்  பிரபலமானவர்,  பல  நண்பர்களைப்  பெற்றிருப்பவர்  என்பதால்  அவரைத்  தடுக்கும்  துணிச்சல்  அடினானுக்கு  இல்லை  என்கிறார்  சரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான்.

“அனைத்துலக  அளவிலான  பதிலடி  சரவாவுக்கு  ஆபத்தாக  முடியலாம்”,  என்று  பாரு  கூறினார்.

சரவாக் அரசு,  அரபு  நாடுகள் உள்பட  பல  வெளிநாடுகளின்  முதலீடுகளைக்  மாநிலத்துக்குக்  கொண்டுவரும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  அரபு  நாடுகள்  அன்வாருடன்  மிகுந்த  நட்புறவு  கொண்டவை  என்பதால்  அவற்றின்  முதலீடுகளை  இழக்க  அடினான்  விரும்பவில்லை  என்றாரவர்.

பிகேஆர்  தலைவர்கள்  நால்வர்   தடுக்கப்பட்டது  பற்றிக்  கருத்துரைத்த  பாரு, இடைத்  தேர்தல்  முடிவை  எண்ணி  மாநில  பிஎன்  பயந்து  போயுள்ளது.  அதனால்தான்  அவர்கள்    பாலிங்கான்  செல்வதை  அது  தடுத்தது  என்றும்  கூறினார்.