கர்பால் டிஏபி தலைவர் பதவியிலிருந்து விலகினார்

karpalஅரசநிந்தனைச்  சட்டப்படி  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால்   டிஏபி  தலைவர்   பதவியிலிருந்து   விலகுவதாக  கர்பால்  சிங்  ஓர்  அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

“இப்போதைய (குற்றவாளியெனத்  தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்)  சூழ்நிலையில்  குற்றச்சாட்டுக்கும்  தீர்ப்புக்கும்  எதிராக   நான் செய்துள்ள  மேல்முறையீட்டின்  முடிவு  தெரியும்வரை டிஏபி  தலைவர்  பதவியிலிருந்து  விலகுவதாக  அறிவித்துக்  கொள்கிறேன்.

“அதற்கிடையில், துணைத்  தலைவர்  டான்  கொக்  வை  இடைக்காலத்  துணைத்  தலைவராக  இருப்பார்”, என்றாரவர்.

2009-இல்,  பேராக்  மாநில  அரசமைப்பு  நெருக்கடியின்போது  நிஜார்  ஜமாலுதினை  மந்திரி  புசார்  பதவியிலிருந்து   நீக்கிய  பேராக்  சுல்தான்மீது  வழக்கு  தொடுக்கலாம்  என்று  கூறியதற்காக  கர்பால்  சிங்குக்கு  எதிராக  அரசநிந்தனை  வழக்கு   தொடுக்கப்பட்டது. அவ்வழக்கில்  அவர்  குற்றவாளியே  என்று  தீர்ப்பளித்த  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  அவருக்கு  ரிம4,000  அபராதம்  விதித்தது.

1966 சங்கச்  சட்டத்தின்  பகுதி  9ஏ(1)(பி)-இன்படி  ஒரு  குற்றச்செயலுக்காக  ரிம2,000-க்கும்  குறையாத  அபராதம்  விதிக்கப்பட்ட  அல்லது  ஓராண்டுக்குக்  குறையாத  சிறைத்தண்டனை  பெற்ற  ஒருவர்  பதிவுபெற்ற  ஓர்  அமைப்பில்  பொறுப்பான  பதவி  வகிக்க  இயலாது.

அச்சட்டத்திலிருந்து  விலக்களிக்குமாறு சம்பந்தப்பட்டவர்  சங்கப்  பதிவதிகாரிக்கு  விண்ணப்பிக்கவும்  இடமிருக்கிறது.

ஆனால்,  அவ்வாறு  செய்து  தம்மைத்  “தரம்தாழ்த்திக்கொள்ளப் போவதில்லை”  என  கர்பால் கூறியுள்ளார்.