பிகேஆர் தலைவரான பின்னர் சங்கப் பதிவதிகாரியால் அதிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளபோதிலும் அன்வார் இப்ராகிம் அப்பதவிக்குப் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்புமனுவை அவர் சார்பாக பிகேஆரின் துணை பொருளாளர் லோ சீ சோங் கட்சித் தலைமையகத்தில் இன்று காலை சமர்ப்பித்தார்.
அன்வாரின் நடவடிக்கைக்கு நேர்முரணாக கர்பால் சிங், அரசநிந்தனை வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால் டிஏபி தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதால் அதன் முடிவு தெரியும்வரை தலைவர் பதவியைத் துறப்பதாக அவர் கூறினார்.
அன்வாரும் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்தான். அதில் விதிக்கப்பட்ட ஐந்தாண்டுச் சிறைத்தண்டனைக்கு எதிராக அவரும் மேல்முறையீடு செய்துள்ளார்.
1966 சங்கச் சட்டத்தின் பகுதி 9ஏ(1)(பி)-இன்படி ஒரு குற்றச்செயலுக்காக ரிம2,000-க்கும் குறையாத அபராதம் விதிக்கப்பட்ட அல்லது ஓராண்டுக்குக் குறையாத சிறைத்தண்டனை பெற்ற ஒருவர் பதிவுபெற்ற ஓர் அமைப்பில் பொறுப்பான பதவி வகிக்க இயலாது.
பிகேஆரின் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை மணி 5-க்கு முடிவுறும். தேர்தல் அடுத்த மாதம்.