பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரியை நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
அப்துல் ரஹிம் கடந்த வாரம் பேசுகையில், எம்எச்370 விமானம், கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் உத்தரவின்பேரில்தான் திரும்பி வருவதாக அரச மலேசிய ஆகாயப்படை “அனுமானம்” செய்துகொண்டது எனக் கூறி இருந்தார்.
மறுநாளே, அவ்வாறு கூறியதைத் திரும்பப் பெற்றுக்கொண்ட அவர், அது தம் சொந்த அனுமானம் என்று கூறிக்கொண்டார்.
அப்துல் ரஹிமின் கூற்று இன்னமும் நாடாளுமன்றப் பதிவேட்டில் இருப்பதால் அந்தத் துணை அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை தேவை என லிம் லிப் எங் (டிஏபி- செகாம்புட்) கூறினார்.
தியான் சுவா(பிகேஆர்-பத்து)வும் அதையே வலியுறுத்தினார். ஆனால், அவை துணைத் தலைவர் ரோனால்ட் கியாண்டி, அதில் ஒரு முடிவெடுக்குமுன்னர் துணை அமைச்சரின் விளக்கத்தைக் கேட்பது அவசியம் என்றார்.