2வது பாலத்துக்குக் கட்டணம் ரிம8.50 மிக அதிகம் என்று மக்கள் கூக்குரல்

bridgeசுல்தான்  அப்துல்  ஹாலிம்  மு’ஆட்ஸாம்  ஷா  பாலத்தைப்  பயன்படுத்தும்  கார்களுக்கு  ரிம8.50  கட்டணம்  என்று  அறிவிக்கப்பட்டிருப்பது  குறித்து  பினாங்கு  மக்கள்  அதிருப்தி  அடைந்துள்ளனர்.

மார்ச்  முதல்  நாள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கால்  திறந்து  வைக்கப்பட்ட  அப்பாலத்தை  மோட்டாரோட்டுனர்கள்  ஒரு  மாத  காலமாக  இலவசமாக  பயன்படுத்தி  வந்தனர். அந்த  இலவசப்  பயணம்  இன்று  நள்ளிரவுடன்  முடிவுக்கு  வருகிறது.

2-வது  பாலக்  கட்டணம்  முதல்  பாலக்  கட்டணத்தைவிட  21.4 விழுக்காடு  அதிகம்  என்று  கூறிய  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  எந்த  நோக்கத்துக்காக  அப்பாலம்  கட்டப்பட்டதோ   அந்த  நொக்கம் -போக்குவரத்தைக்  குறைக்கும்  நோக்கம்-  நிறைவேறப்  போவதில்லை  என்றார்.

முதல்  பாலத்தில்  கட்டணம்  ரிம7. மேலும்,  பினாங்கைச்  சேர்ந்த  ‘தச்  அண்ட்  கோ’  பயனீட்டாளர்களுக்கு  முதல்  பாலத்தில்  கொடுக்கப்படுவதுபோல்  20  விழுக்காடு  தள்ளுபடியும்  கொடுப்பதில்லை (கொடுத்தால்  கட்டணம்  ரிம5.60 ஆகும்)  என்பதையும்  லிம்  சுட்டிக்காட்டினார்.

“இந்நிலையில்  இது முதல் பாலத்தில்  போக்குவரத்து  நெரிசல்  குறைவதற்கு  எப்படி  உதவப்  போகிறது?”,  என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.