தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட வரைவு – காலத்தின் கட்டாயம், ஆனால்…

preschool-3bமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறையின் கீழ் 2012-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு இந்த ஆண்டோடு ஈராண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில், இந்த மேம்பாட்டுத் திட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மீள்பார்வையிட வேண்டியது அவசியம்  என்கிறார் செம்பருத்தி கட்டுரையாளர் தமிழினி.  

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்ட வரைவு உருவாக்கப்பட்டதன் நோக்கம் கீழ்வருமாறு:-

  1. 1. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசாங்க ஒதுக்கீட்டினைப் பகிர்ந்தளிப்பதற்குத் தொடர்புடையவர்களுடனும் இயக்கங்களுடனும் இணைந்து பணியாற்றுதல், துணைபுரிதல்
  2. புதிய 7 தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பதைக் கண்காணித்தல்,  துணைபுரிதல்.
  3. கல்விச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல, பள்ளிகளின் மேலாண்மை வாரியத்தைத் தோற்றுவிக்க தமிழ்ப்பள்ளிகளுக்குத் துணைபுரிதல்.
  4. குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை ஆராய்தல், இப்பள்ளிகளை இடமாற்றம் செய்ய விரிவான திட்டங்களை வரையறுத்தல்.
  5. தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களை ஆராய்தல், இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண கல்வி அமைச்சு மற்றும் பிற அரசாங்க இயக்கங்களோடு  ஒத்துழைத்தல்.
  6. புதிய குடியிருப்புப் பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் நிர்மாணிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கும் பல  அமைப்புகளை ஒருங்கிணைத்தல்.
  7. மலேசிய தமிழ்க் கல்வியோடு தொடர்புடைய அரசு சார்பற்ற இயக்கங்களுக்குத் துணைபுரிதல், இணைந்து செயலாற்றுதல்.
  8. தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகளை உருவாக்குதல், நிருவகித்தல்.  (நன்றி: மயில் மாத இதழ்)

Naib Rajendran1இந்த எட்டு முதன்மை நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவமைக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்ட வரைவு இன்றைய நிலையில் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது என்பதை மீள்பார்வை செய்ய வேண்டும். இதனை  பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் அதை அவரது கடமையாக எடுத்து செய்ய வேண்டும்.

பொதுமக்கள் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள் தொடர்புடையவர்களிடம் கூட இந்த 2 ஆண்டுகளில் அடைந்த அடைவுநிலை குறித்து தெளிவான விளக்கத்தினை வழங்காததே விமர்சனத்திற்கான முக்கிய காரணமாகிறது என்கிறார் தமிழினி.

சரியான நேரத்தில் வெளியிடப்படாத விளக்கங்களால் மக்கள் ஒரு தனிநபர் அல்லது அமைப்பின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை சீர்குலையும் என்பது வரலாறு. இலவு காத்த கிளியான அனுபவம் நமக்கு அதிகமாகவே உள்ளது.

காரணம் நமக்கு ஆற்றல் இல்லை என்பதல்ல – அம்னோ ஆதிக்கத்திற்கு அடிபணிந்து தலையாட்டுவதால் உரிமை என்பது சோரம் போகிறது  என்கிறார் தமிழினி.  அதனால்தான் இதற்கு முன்பு இருந்த தான்  சிறி மாரிமுத்து, டத்தோ டெனிசன் போன்றவர்கள் கட்சி அரசியல் தாக்கத்தாலும், சந்தர்ப்ப சூழலுக்கு தகுந்தவாறு  தலையை ஆட்டி,  தங்களது பணியை தேவைக்கு உகந்த வகையில் சரியாகச் செய்யவில்லை.

preschool2இப்போது பேராசிரியர் இராஜேந்திரன் குழுவினரின் தொடர் நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து அவதானித்தபடியே இருக்கின்றனர். தமிழ்ப்பள்ளிகள் திட்டவரைவு மாநாட்டிற்குப் பிறகு நடந்தது என்ன என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. பிப்ரவரி மாத மத்தியில் நடத்தப்பெற்ற அந்த மாநாட்டிற்கு பிறகு இறுதி திட்ட வரைவு சம்பந்தப்பட்டவர்களிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. அவ்வகையில் அது பாராட்டத்தக்கது.

ஆனால், வழக்கம்போல வீரியத்தோடு தொடங்கப்பட்டு பெட்டிக்குள் அடைக்கப்பட்ட எல்லா திட்டங்களைப் போல இந்த மேம்பாட்டுத் திட்ட வரைவும் ஆகிவிடக் கூடாது என்பதில் இம்முறை அனைவரும் விவேகமாக செயல்படும் தோற்றமும் தென்படுகிறது என்கிறார் அவர்.

நமக்கு தேவை 100 நாட்களுக்கு ஒரு முறை இக்குழு ஒரு மீள்பார்வை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால் சமூகத்தின் அங்கீகாரமும் நம்பிக்கையும் அதிகமாகும். அதோடு எந்த அளவுக்கு செயலாக்கம் காணலாம் என்பதையும் உணரலாம்.