அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ), அரசாங்கங்கள் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐசிஏஓ) வரையறுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
“நடந்துவிட்ட துயரச் சம்பவத்துக்குப் பாதுகாப்பு அம்சம் ஒரு காரணமோ இல்லையோ, இரண்டு பயணிகள் போலிக் கடப்பிதழ்களை வைத்து ஒரு விமானத்தில் ஏற முடிந்தது என்பதே ஓர் அபாய அறிவிப்பாகும். விமான நிறுவனங்கள் எல்லைக் காவலர்களோ போலீஸ்காரர்களோ அல்லர். இது அரசாங்கங்களின் பொறுப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
“சுமார் 60 நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஏபிஐ (பயணிகள் பற்றிய முன்தகவல்கள்) வழங்க விமான நிறுவனங்கள் பல மில்லியன் டாலர்களைச் செலவிடுகின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது”, என ஐஏடிஏ தலைமை இயக்குனர் டோனி டைலர் இன்று காலை கோலாலும்பூரில் ஐஏடிஏ கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
ஐஏடிஏ அதன் பங்குக்கு விமானங்களைத் தடங்காணும் முறையை மேம்படுத்த வல்லுனர்களின் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யும் என்றவர் தெரிவித்தார்.