தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க பினாங்கு அரசு அலோசனை

1 limபினாங்கு  அரசு  நீர்  கட்டணத்தைக்  கூட்டலாமா  என்று  ஆலோசித்து  வருகிறது.

தண்ணீர்  விரயமாக்கப்படுவதைத்  தடுக்க  மாநில  அரசும்  பினாங்கு  தண்ணீர்  விநியோக  நிறுவனமும்(பிபிஏபிபி)  மேற்கொண்ட  நடவடிக்கைகள்  “வெற்றி  அளிக்கவில்லை” என்பதால்  கட்டண  அதிகரிப்பு  அதற்கு  உதவுமா  என்று  ஆலோசிக்கப்படுவதாக  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார்.

“தண்ணீர்  கட்டண  அதிகரிப்பை என்ஜிஓ-கள்  எதிர்த்தனர். முதலில் மென்மையான  நடவடிக்கை  தேவை  என்றனர். அதனால், தண்ணீரை  முறையாகப்  பயன்படுத்தும்  வழிமுறைகளை)  பொதுமக்களுக்கு  எடுத்துச்  சொன்னோம்.  ஆனால், அந்த  மென்மையான  நடவடிக்கை  பலனளிக்கவில்லை.

“அதனால், மாநில  ஆட்சிக்குழு  இன்று  காலை  அதன்  கூட்டத்தில்  தண்ணீர்  பங்கீட்டை  இம்மாதம்   கொண்டுவருவதில்லை  என்றும்  அதற்குப்  பதிலாக தண்ணீர்  கட்டணத்தை  உயர்த்துவது  பற்றி  ஆராய  வேண்டும்  என்ற பிபிஏபிபி-இன்  வேண்டுகோளை- அது  நீர்ப்  பயனீட்டைக்  குறைக்க  உதவும்  என்பதால்-  ஏற்றுக்கொள்வது  என்றும்  முடிவு  செய்துள்ளது”, என்று  லிம்  கூறினார்.

கட்டணம்  எவ்வளவு  உயரும்  என்பதைத்  தெரிவிக்க  மறுத்த  அவர், “அதிகரிக்கப்பட்டாலும்கூட அதுவே  நாட்டில்  நீருக்காக  செலுத்தப்படும்  மிகக்  குறைந்த கட்டணமாக  இருக்கும்”,  என்றார்.