புவா: நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கான செலவு ரிம28.5 பில்லியன்

puaநாட்டில்  தனியார்  நிறுவனங்களிடமுள்ள  கட்டணம்  வசூலிக்கப்படும்  26  நெடுஞ்சாலைகளையும்  கட்டுவதற்கு  ஆன  செலவே  ரிம29 பில்லியன்  ரிங்கிட்டுக்கும்  குறைவுதான். அப்படி இருக்க,  அந்த  நெடுஞ்சாலைகளை  அரசாங்கம்  தன்வசம்  எடுத்துக்கொள்ள  விரும்பினால்  ரிம400 பில்லியன்   கொடுக்க  வேண்டும்  என்று  கூறப்படுகிறதே  அது  எப்படி  என்று  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  வினவுகிறார்.

செப்பாங்  எம்பி  முகம்மட்  ஹனிபா  மைதினின்  கேள்வி  ஒன்றுக்கு  நாடாளுமன்றத்தில்  பதிலளித்த  பொதுப்  பணி  அமைச்சர்  ஃபதில்லா யூசுப், எல்லா நெடுஞ்சாலைகளையும்  வாங்குவது  சாத்தியமில்லை  என்றும்  அதற்கு  ரிம400 பில்லியன்  கொடுக்க  வேண்டியிருக்கும்  என்றும்  கூறினார்  என  புவா  இன்று  ஓர்  அறிக்கையில்  தெரிவித்தார்.

26  நெடுஞ்சாலைகளின்  கட்டுமானச்  செலவைக்  கூட்டினால்   ரிம28.5 பில்லியன்  வருகிறது.

“பிஎன்  அரசாங்கம்  ரிம400 பில்லியன்  அதாவது  கட்டுமானச்  செலவான  ரிம28.5 பில்லியனைப்போல்  14  மடங்கு  கொடுக்க  வேண்டும்  என்று  கூறுவது  ஏன்?”, என புவா கேள்வி  எழுப்பினார். சாலைப்  பராமரிப்பு  நிறுவனங்கள்  வருமானத்தை  இழக்கும்  என்பதால் அரசாங்கம்  அதற்கும்  இழப்பீடு  வழங்க  முயல்கிறதா என்றும்  அவர்  வினவினார்.  அரசாங்கம்  இழப்பீடு  கொடுக்க  வேண்டியதில்லை  என்பதை  ஒப்பந்தங்கள்  தெளிவாகவே  குறிப்பிடுவதாகவும்  புவா  கூறினார்.