தெங்கு ரசாலி: ஐபிபி-களுக்கு உதவித்தொகை வழங்குவது ‘மன்னிக்கமுடியாத பாவச் செயல்’

ku liபயனீட்டாளர்களுக்கு  உதவித்தொகைகள்  குறைக்கப்படும்போது  1997-இலிருந்து  2011வரை  தனியார்  மின் உற்பத்தி  நிறுவனங்களுக்கு(ஐபிபி)  ரிம136 பில்லியன்  உதவித்தொகை  வழங்கியது  “மன்னிக்கமுடியாத  பாவச்  செயல்”  என  தெங்கு  ரசாலி  ஹம்சா  கூறினார்.

பயனீட்டாளர்  பொருள்களுக்கு  உதவித்தொகை  வழங்குவது  வாழ்க்கைச்  செலவினத்தைக்  குறைப்பதற்கான  சிறந்த  வழி   அல்லதான்,  என்றாலும்  அதையாவது  ஒருவகையில்  ஏற்றுக்கொள்ளலாம்  என்றாரவர்.

“ஆனால், தேசிய  மின்  விநியோகிப்பாளருக்கும்  தனியார்  மின்  உற்பத்தியாளர்களுக்கும்  உதவித்தொகை  வழங்குவதைத்தான்  ஏற்க  முடியாது.  அதை ஒரு  பாவச்  செயலாகத்தான்  கருத  வேண்டும்.

“இதில்  வருத்தத்துக்குரிய  விசயம்  என்னவென்றால்,   இவர்கள்  எரிபொருளுக்கான  உதவித்தொகையைத்  தொடர்ந்து  அனுபவிக்கிறார்கள்   ஆனால், பயனீட்டாளர்களுக்கான  பெட்ரோலிய  உதவித்  தொகை  அண்மையில்  நிறுத்தப்பட்டது”,  என  கிளந்தான்  இளவரசரும்,  ஒரு  காலத்தில்  நிதி  அமைச்சராக  இருந்தவருமான  தெங்கு  ரசாலி  கூறினார்.

அனாஸ் ஆலாம்  பைசிலி  எழுதிய  “மலேசியா காயா, ரக்யாட்   மிஸ்கின் (வளமான  மலேசியா,  ஏழை  மக்கள்)  நூல்  வெளியீட்டு  விழாவில்  கலந்துகொண்டு  பேசிய  தெங்கு  ரசாலி, உதவித்  தொகையை  ஐபிபிகளுக்குக்  கொடுப்பதற்குப்  பதில்  ஏழை  மக்களுக்குக்  கொடுக்கலாம்  என்றார்.