இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட இரு குழந்தைகளை இந்து தாயாரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

 

Hindu mumதகப்பனாரால் இந்து தாயாரின் அனுமதியின்றி இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட இரு குழந்தைகளை தாயாரிடம் ஒப்படைக்குமாறு சிரம்பான் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

அக்குழந்தைகளின் தாயாரான எஸ். தீபா, 30, தமது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியும், குழந்தைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கடந்த டிசம்பர் மாதத்தில் செய்திருந்த மனு மீது தீபாவுக்கு சாதகமாக நீதிபதி ஸபாரியா முகமட் யுசுப் அவரது அறையில் தீர்ப்பு அளித்தார்.

ஆனால், தீபாவின் மகன் வயது 6, மகள் வயது 9, ஆகிய இருவரின் மத மாற்றத்தை இரத்து செய்வதற்கு தனிப்பட்ட வழக்கு தொடர வேண்டும்.

உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு கடந்த ஆண்டு ஏப்ரலில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய என். வீரன் @ இஸ்வான் அப்துல்லா அவ்விரு குழந்தைகளையும் அவரின் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள உத்தரவிட்ட ஷரியா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமைந்துள்ளது.

2004  ஆம் ஆண்டில் நடைபெற்ற தீபா மற்றும் வீரன் ஆகியோரின் திருமணம் சிவில் சட்டத்தின் அடிப்படையில் நடைபெற்றதால், நீதிபதி
ஸபாரியா சட்ட சீர்திருத்தம் சட்டம் (Law Reform Act) செக்சன் 51 இன் கீழ் தீபாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.

நீயும் இஸ்லாத்திற்கு மாறி விடு

ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி பிரதமர்துறை இலாகாவின் துணை அமைச்சராக இருந்த போது நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் தீபா இவ்விவகாரத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

தீபா அவருடைய குழந்தைகளின் மதம் மாற்ற சான்றிதழ்களை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவாகார அதிகாரிகள் அவரையும் இஸ்லாத்திற்கு மாறும்படி கேட்டுக் கொண்டனர் என்று அக்கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையத் தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்திருந்த தீபா, தமது குழந்தைகளின் மதம் மாற்றம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று கண்ணீர் வழிய கூறினார்.

“தீர்ப்பில் அர்த்தமே இல்லை”

இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்பான காசே சயாங்கில் பணியாற்றும் வீரன், 30, தீர்ப்பிற்குப் பின்னர் கோபமுடன் காணப்பட்டார்.

நீதிமன்றத்தின் “தீர்ப்பில் அர்த்தமே இல்லை” என்றும் ஷரியா நீதிமன்றம் சிறந்த தீர்ப்புகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

“இது இப்படித்தான் இருக்குமென்றால், நான் மீண்டும் சாராயம் அடிக்க திரும்புவதை அவர்கள் விரும்புகின்றனரா?”, என்று அவர் கத்தினார்.

வீரனின் வழக்குரைஞர் முகமட் ஃபைஸ் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.