ஐநா பாதுகாப்புச் சபையின் 1373-வது தீர்மானத்துக்கு அமைய இலங்கை அரசாங்கமும் வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
அதுவும் ஜெனிவாவில் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் இது நடந்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மேற்குலக நாடுகளின் முடிவாக இருந்தாலும், அதற்கு ஒரு வகையில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஜெனிவாவில் கூட்டத்தொடரில் இப்போது இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே பங்கேற்றிருந்தனர்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் இதன்போது கடுமையாகவும் வலியுறுத்தியிருந்தனர். இந்தச் சூழலில் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தவுடன் அரசாங்கம் தடையை விதித்துள்ளது. ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலியாகவே பரவலாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்தத் தடையின் மூலம் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கவும், அவர்களுக்கும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் இருக்கின்ற சுமுகமான உறவுகளைக் குலைக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகிறது. அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளில் பல மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள் அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவைப் பேணும் நிலையில் இருப்பவை. உதாரணத்துக்கு உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறானவை. இவை, விடுதலைப் புலிகளின் எந்தவொரு அமைப்பினதும் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் இந்த அமைப்புகள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும் அதிகாரப் பகிர்வுக்கும் கொடுக்கும் அழுத்தங்களை அரசாங்கத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தத் தடையின் மூலம் புலம்பெயர் அமைப்புகளை நெருக்கடிக்குள் தள்ளுவது மட்டும் அரசாங்கத்தின் நோக்கமல்ல. ஜெனிவாவில் தமக்கெதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய மேற்குலக நாடுகளையும் சிக்கலுக்குள் மாட்டி விடுவது தான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. ஏனென்றால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள 1373வது இலக்க ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுபவை..
பயங்கரவாதத்தை ஒழித்தல், மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது. அமெரிக்கா மீது அல்கைடா நடத்திய தாக்குதலையடுத்து 2001 செப்டம்பர் 28ம் திகதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் பின்லேடனையும், அல்கைடாவையும் நசுக்குவதற்கு உலகளாவிய ஆதரவை உறுதிப்படுத்திக் கொளவதுதான். அமெரிக்கா அந்த நோக்கத்தை பெரும்பாலும் அடைந்து விட்டது என்றே கூறலாம். இப்போது இலங்கையும் அது வழியில் நடக்கப் பார்க்கிறது.
புலிகளுடன் போர் நடத்திய போது கூட புலிகளுக்கு எதிராக இத்தகைய தடையை விதிக்க முனையாத இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இந்தத் தடையை விதித்திருக்கிறது.
இது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சி என்பதை விட வேறெதுவாகவும் இருக்க முடியாது. இந்தத் தடைக்குப் பின்னரும் குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் மேற்கு நாடுகள் உறவுகளை வைத்துக்கொண்டு இருந்தாலோ, அவற்றைச் செயற்பட அனுமதித்தாலோ பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக மேற்கு நாடுகளை நோக்கி இலங்கை சுட்டுவிரலை நீட்டப் போகிறது. அத்துடன் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் சர்வதேசக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் இலங்கை சட்டரீதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
அவர்கள் எதைச் சொன்னாலும் அது பயங்கரவாதிகளின் கருத்தாக தட்டிக்கழிக்கும்படி எடுத்துக்கூறும். இதுதான் இனி நடக்கப்போகிறது. இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்துவரும் தலைவலியைக் குறைக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. இந்த அமைப்புகளில் இயங்குவோருக்கும் இலங்கையில் வசிக்கும் அவர்களின் உறவுகளுக்கும் இடையிலான உறவில்கூட இந்தத் தடை விரிசலை ஏற்படுத்தும்.
அவ்வாறான உறவு நீடித்தால் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி இங்குள்ள உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடும். எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது இங்குள்ள உறவுகளுடன் உறவைத் துண்டிக்க வேண்டும் அல்லது இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளின் தொடர்புகளைத் துண்டிப்பதால் ஏற்படும் விரிசல் புலம்பெயர் தமிழர்களின் இலங்கை அரச எதிர்ப்பு போராட்டங்களை உளவியல் ரீதியாக வலுவிழக்கச் செய்யும்.
அது இனிவரும் காலத்தில் இலங்கைக்கான சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு உதவியாக அமையும். இவ்வாறு அடுக்கடுக்கான பல இலக்குகளை அடையும் நோக்கில் தான் அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளது.
தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- புலம்பெயர் அமைப்புக்கள்
இலங்கை அரசாங்கத்தின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட பதினாறு அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யபபட்ட அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளன.
அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் தமது அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கையை சர்வதேச சமூகம் நிராகரிக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசு கோரியுள்ளது.
தமிழீழ இராச்சியத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் அனைவரினதும் மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய தமிழர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் தடையை திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழர் அமைப்புக்கள் எடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைள் வெற்றி பெற இறைவனை வேண்டுவோம். அடாவடித்தனம் செய்பவனை வெற்றி கொள்ள வேறு வழி தெரியவில்லை!
“அடாவடித்தனம்” என்றுமே நிரந்தரம் இல்லை. வரலாற்றை புரட்டிப் பாருங்கள் வழி பிறக்கும். நேர்மைக்கு என்றுமே இரு வழிகள் உண்டு. எதிரியின் பலவீனம் எங்கே என்று அறிந்து அவன் அறியாமலே பின் வழி வந்து அடிப்பது போரின் யுக்திகளில் ஒன்று. எதிரியின் மனதில் பயத்தை ஏற்படுத்தி அதன் வழி எதிரி ஆக்கமற்ற நடவடிக்கையில் இறங்கி அவனை புதைமண்ணுக்குள் சிக்க வைப்பது மற்றொரு யுக்தி. ஆழ்ந்து சிந்தியுங்கள் வழி பிறக்கும்.
தமிழீழம் நிச்சயம் மலரும்.ஆனால் இதை தடுக்க முயல்வது இந்தியா மட்டுமே.