அரசியல் காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாற்றப்படுகிறார்கள்?

1 teachersகிளந்தான்.  பாச்சோக்  மாவட்டத்தில்  80-க்கு  மேற்பட்ட  ஆசிரியர்கள் அரசியல்  காரணத்துக்காக  இடம்  மாற்றப்பட்டிருக்கிறார்கள்  அல்லது  மாற்றப்படுவார்கள்  என  பக்காத்தான்  ரக்யாட்  எம்பிகள்  கூறுகின்றனர்.

பிகேஆர்  தொடர்புடைய  என்ஜிஓ-வான  அனாக்  மூடா  மலேசியா(எஸ்ஏஎம்எம்)-வுக்குக்  கிடைத்த  ஒரு  ஆவணத்தைக்  காண்பித்த  அவர்கள்,  பக்காத்தான்  ஆதரவாளர்கள்  என்பதுதான்   இடமாற்றதுக்கான  காரணம்  என்று  கூறினர்.

நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  பாச்சோக்,  பாஸ்  எம்பி  அஹ்மட்  மர்சுக்  ஷாரி, இது  ஒரு  சிறு  எண்ணிக்கைதான்  என்றார்.

“நாடு  முழுக்க  இது  நடைபெறுவதாக  நினைக்கிறோம்.  பின்னர்  இது  பற்றித்  தெரியப்படுத்துவோம்”,  என்றார்.

பாச்சோக் கல்வி  துணை  அதிகாரி  அம்ரான்  முஸ்தபா-வைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு  அப்படியொரு  பட்டியல்  இருப்பது  உண்மைதான்  என்பதை  ஒப்புக்கொண்டவர்,  அது  “அதிகாரப்பூர்வமானது  அல்ல”  என்றார்.

அது,  மாவட்ட கல்வி  அதிகாரி இருந்த  ஒருவரால்  தயாரிக்கப்பட்ட  ஒரு  “பழைய  பட்டியல்” என்றும்  அவர்  இப்போது  பாச்சோக்  அலுவலகத்தில்  இல்லை  என்றும்  சொன்னார்.

“அந்தப்  பட்டியலை  அடிப்படையாகக்  கொண்டு  யாரும் இடமாற்றம்  செய்யப்பட  மாட்டார்கள்”,  என  அம்ரான்  கூறினார்.

ஆனால்,  ஆசிரியர்கள் பக்காத்தான்  ஆதரவாளர்களா இல்லையா  என்ற  விவரத்தை  மாவட்ட  கல்வி  அலுவலகம்  ஏன்  வைத்திருக்க  வேண்டும்  என்பதற்கு  அவரால்  சரியான  காரணம்  கூற  முடியவில்லை.