பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும், ஆனால் தமது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அறிவித்துள்ளார்.
ஆனால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் தேர்தலில் தாம் எந்த ஒரு தரப்பினருடனும் சார்ந்து இருக்கவில்லை என்றும் அவ்வாறு கூறப்படுவதை மறுப்பதாகவும் அவர் கூறினார்.
“நான் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து அவர்களிடம் எனது இலக்கையும் இலட்சியத்தையும் விளக்கினேன்…அவர்கள் புரிந்து கொண்டனர் என்று நம்புவதோடு அவற்றை நிலைநிறுத்துவர் என்றும் நம்புகிறேன்.
“ஆகவே, நான் எனது உதவித் தலைவர் பதவியை மட்டும் தற்காத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்”, என்று அவர் ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சுவாவுக்கு தார்மீக அளிக்கும் வகையில் துணைத் தலைவர் பதவிக்கான பிகேஆர் வேட்பாளர்களில் ஒருவரான சைபுடின் நசுதியான் அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்தார்.