சிறையில் கொல்லப்பட்ட கைதியின் தந்தைக்கு ரிம4 இலட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 

Father of killed prisonerஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுங்கை பூலோ சிறைச்சாலையில் சக கைதிகளால் கொல்லப்பட்ட 23 வயதான ஒரு கைதியின் தந்தை எம். கவுர் சந்தரத்திற்கு ரிம4 இலட்சத்திற்கு மேல் வழங்கும்படி உள்துறை அமைச்சு, சிறைசாலை இலாகா மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இவ்வாண்டு பெப்ரவரி 13 இல், நீதிபதி நிக் ஹஸ்மாட் நிக் முகமட் சிறைச்சாலை அதிகாரிகள் கைதி ஜி. உதயசந்திரனை கவனித்துக் கொள்ள தவறிவிட்டதோடு அவர்களுடைய செயல்பாடுகளில் அலட்சியமாக இருந்துள்ளனர். அதன் விளைவால், அவர் இதர கைதிகளால் கொல்லப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தார்.

2009 ஆம் ஆண்டில் கவுர் சந்தரம் தொடர்ந்த வழக்கில் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர், சுங்கை பூலோ சிறைச்சாலை இயக்குநர், சிறைச்சாலை மருத்துவமனை அதிகாரி, இரண்டு வார்டன்கள் மற்றும் அரசாங்கம் ஆகியோரை அவர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான தமது கோரிக்கையை கவுர் சந்தரம் நிருபித்துள்ளார் என்பதில் தாம் திருப்தியடைவதாக நீதிபதி நிக் ஹஸ்மாட் அவரது தீர்ப்பில் கூறியுள்ளார்.

வாதி கவுர் சந்தரம் சார்பில் வழக்குரைஞர் அர்னல்ட் அண்ரூவும் பிரதிவாதிகளின் சார்பில் மூத்த பெடரல் வழக்குரைஞர் எச். எஸ். ஹுவாமும் வழக்கை நடத்தினர்.

நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு தொகைக்கு எதிராக பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்துள்ளனர்.