டிஏபி, ஹுடுட் சட்ட அமலாக்கம் குறித்து அதன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பும் மசீச-வுக்கு “பாலர்பள்ளி பயிற்சி” ஒன்றை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது.
மசீச தலைவர் லியோ தியோங் லாய், துணைத் தலைவர் வீ கா சியோங் உள்பட அக்கட்சியின் தலைவர்கள் பலரும் ஹுடுட் மீது டிஏபி-இன் நிலைப்பாடு என்னவென்று விடாமல் கேட்டுக்கொண்டே இருப்பதாக டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு அரசியலில் அடிப்படைப் பயிற்சி வழங்க விரும்புகிறோம்”, என்றாரவர்.
ஹுடுட் சட்டம், பக்காத்தான் ரக்யாட் கொள்கையில் இடம்பெறவில்லை என்பதை லிம் மீண்டும் வலியுறுத்தினார்.
“பலமுறை சொல்லிவிட்டேன்………பல்லின மலேசியாவுக்கு ஹுடுட் பொருத்தமற்றது, சமயச் சார்பற்ற நம் அரசமைப்புக்கு எதிரானது. டிஏபி-இன் இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை”, என்றாரவர்.