ஏஜி வெளியாள்களைக் கொண்டு கர்பாலையும் டிஏபியையும் முடிக்கப் பார்க்கிறாரா?

limடிஏபி  தொடுத்துள்ள  வழக்கில்  சங்கப்  பதிவதிகம்(ஆர்ஓஎஸ்)  சார்பில்   வாதாட  அம்னோ-தொடர்புள்ள   வழக்குரைஞர்   அமர்த்தப்பட்டிருப்பது  டிஏபி-யை  ஒரேயடியாக  தீர்த்துக்  கட்டும்  அரசியல்நோக்கம்  கொண்ட  செயல்  என  அக்கட்சித்  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  இன்று  கூறினார்.

“பிஎன்-னின்  அரசியல்  எதிரிகளை  எதிர்க்க  வெளியாள்களைக்  கொண்டுவர  வேண்டியிருக்கிறதே,  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்தில்  தொழில் நிபுணத்துவமும் திறமையும்  கொண்ட  வழக்குரைஞர்களுக்குப்  பஞ்சம்  வந்துவிட்டதா?

“முகம்மட்  ஷாபி  அப்துல்லாவை  அமர்த்தியிருப்பது  பிஎன்,  கர்பாலை  மட்டுமல்ல,  டிஏபியையும்  ஒழித்துக்கட்டுவதில்  முழுமூச்சாக  ஈடுபட்டிருப்பதற்கான  அறிகுறியாகும்”, என்று  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அன்வார்  இப்ராகிமுக்கு  எதிரான  குதப்புணர்ச்சி  வழக்கின்  மேல்முறையீட்டில்  அரசுதரப்பு  வழக்குரைஞராக ஷாபி  நியமிக்கப்பட்டதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.