தீபா விவகாரத்தில் போலீஸ் கைகட்டிக் கொண்டிருப்பதை மஇகாவும் மசீசவும் சாடின

velமகனைக்  கடத்திச்  சென்ற, முஸ்லிமாக  மதம்  மாறிய  தம்  முன்னாள்  கணவருக்கு  எதிராக எஸ்.தீபா புகார்  செய்திருந்தாலும்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்காது  என்று கூறிய  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்  காலிட்  அபு  பக்காரை  மஇகா  தலைவர்  ஒருவர்  கடுமையாக  சாடியுள்ளார்.

அதைப்  “பொறுப்பற்ற நிலைப்பாடு”  என்றுரைத்த  கட்சி  வியூக  இயக்குனர்  எஸ்.வேள்பாரி,  குழந்தைகளைப்  பராமரிக்கும்  உரிமையை   இஸ்வான்  அப்துல்லா ஷியாரியா   நீதிமன்றத்திடம்  பெற்றிருக்கிறார்  என்ற  காரணத்தைக்  காட்டி  அதன்  பின்னால் போலீஸ்  ஒளிந்துகொள்ளக் கூடாது  என்றார்.

“அப்படி  இருந்தால்,  அவர்  முதலில்  போலீஸ்  நிலையம் சென்று  ஓரு  போலீஸ்  அதிகாரியுடன்  முன்னாள்-மனைவியின்  வீடு  சென்றிருக்க  வேண்டும். அல்லது  அவரின்  வழக்குரைஞர்  வழி  தீபாவின்  வழக்குரைஞரைத்  தொடர்பு  கொண்டிருக்க  வேண்டும்.

“ஆனால்,  அவர்  அதைச்  செய்யவில்லை. மகனைப்  பறித்துக்கொண்டு  ஓடி  இருக்கிறார். அது,  நீதிமன்ற  உத்தரவை வைத்துள்ள  ஒருவர்  செய்யும் வேலை  அல்லவே”.

தீபா  தம்  புகாரில் அச்சம்பவத்தின்போது  தாம்  தாக்கப்பட்டதாகவும்  கூறியுள்ளார்.  அதன்மீதும்  போலீஸ் நடவடிக்கை எடுக்கப்போவதில்லையா  என்றும்  வெள்பாரி  வினவினார்.

“இஸ்லாமிய  இயக்கம்  ஒன்றில்  பணிபுரிவதால்  அவரின்  கணவர்  சட்ட விலக்கு  பெற்றவர்  ஆகி  விடுவாரா?  நியாயம்  எங்கே?”,  என்று  கேட்டவர்  ஐஜிபி  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

இந்து  சங்க  முன்னாள்  தலைவர்  ஏ.வைத்திலிங்கமும்  ஓர்  அறிக்கையில்  போலீசின்  செயலைக்  கண்டித்திருந்தார்.

போலீசைக்  கண்டிப்பதில்  மசீசவும்  சேர்ந்து  கொண்டது.  “சமயச்  சார்பற்ற  சட்டங்களைச்  செயல்படுத்துவதே”  போலீசின்  பொறுப்பு  என  மசீசவின்  ஷியாரியா  சட்டம்,  கொள்கை  அமலாக்கம்  மீதான  சிறப்புப்  பணிக்குழுத்  துணைத்  தலைவர்  கூ  சின்  நாம்  கூறினார்.

“இஸ்வான்  சிரம்பான்  உயர்  நீதிமன்றம்  எஸ்.தீபாவுக்கு  வழங்கிய பராமரிப்பு  உரிமையை  மீறியது  மட்டுமல்லாமல் மகனைக்  காப்பாற்ற  முயன்ற  தீபாவை  வாகனத்தில்  இழுத்துச்  சென்றதின்வழி  அவரின்  உயிருக்கும்  அபாயத்தை  ஏற்படுத்தியுள்ளார்”,  என கூ  கூறினார்.