ஜயப் புத்தாண்டு வாழ்த்துகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2014.

xavierஜயச் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கும் இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஜயப் புத்தாண்டு, இந் நாட்டுக்கும், மக்களுக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கும், ஜெயத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நாட்டின் வளத்தில், வளர்ச்சியில் பங்குள்ளவர்களாக நம்மை மேம்படுத்திக் கொள்ள ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

நாட்டின் 56 ஆண்டு கால வரலாற்றில் மிகச் சவாலான காலகட்டமான இதில், ஜயச் சித்திரைப் புத்தாண்டை எதிர்கொள்கிறோம். இஸ்லாமியர் அல்லாதவர்களின் அடிப்படை திருமண ஒப்பந்தம் மற்றுமின்றி அவர்களின் பிள்ளைகள் கூட அவர்களுக்கு சொந்தமில்லை என்ற அவலம், மலேசியாவின்றி எங்கு நடக்கும்? வன்முறைக்கு எதிராக .பாதிக்கப்படும் ஒரு தாய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரே அதனை மறுக்கும் அவலம் எங்கு நடக்கும்? அப்படிப்பட்ட போலீஸ் தலைவரை நாடு இதுவரை கண்டதுண்டா?

 

இது போன்ற பற்பல மாற்றங்களை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அநீதியை தட்டிக்கேட்கவும், சில மாற்றத்தினால் கிட்டவேண்டிய அனுகூலங்களின் பலனை மக்கள் அனுபவிப்பதையும் உறுதி செய்ய வேண்டியப் பொறுப்பு நமக்கு உண்டு.

 

நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் நம் முன்னோர்கள் செய்த அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் மற்றவர்கள் மறந்து விட்ட இவ்வேளையில், நமது உரிமை குரல், பலமாக ஒலிக்க வேண்டும், விவேகமாக எடுக்கும் முடிவு, நமது தியாகம், எதிர்பார்ப்பு இரண்டும் என்னென்பதை மற்றவர்கள் உணரச் செய்யவேண்டும்.

 

நம் முன்னோர்கள் உழைப்பின் துணையுடன் இந்நாட்டின் எதிர்காலத்தை மாற்றினார்கள்., அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்நாட்டில் நாம் நமது பங்கினைப் பெறத் தவறினால் அதற்காக நமது சந்ததி நம்மை நிந்திக்கும். ஆக, இந்த இனிய புத்தாண்டில் எல்லா இந்தியர்களும் ஒற்றுமையான விவேகமான செயல் மாற்றத்தினால் நமது உரிமையை, உயர்வை உறுதி செய்வோம்.

 

ஜயச் சித்திரைப் புத்தாண்டை ஜெயமளிக்கும் திருநாளாகக் கொண்டாடுவோம். விவேகமாகக் கடமையைச் செய்வோம், விரக்தியை ஜெய வெடிகொண்டு தகர்ப்போம். அனைவருக்கும் பக்காத்தான் சார்பிலும், கெஅடிலான் சார்பிலும் எனது ஜயச் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.