பினாங்கு பிகேஆரில், கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக 13 தொகுதிகளிலும் உயர்பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெனாந்தியில் உள்ள யயாசான் அமானில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர்.
பிகேஆர் பினாங்கின் 500,001 உறுப்பினர்களில் 496,923 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு ஏப்ரல் 27-இலிருந்து மே 11வரை நடைபெறும்.
பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் நோர்லேலா அரிப்பின், பெர்மாத்தாங் பாவில் ஐந்து பதவிகளுக்கு- தொகுதித் தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர். மாநில மகளிர் துணைத் தலைவர், உதவித் தலைவர்- போட்டி இடுகிறார்.
நடப்புத் தொகுதித் தலைவர்களாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள நேரடிப் போட்டிகளையும் சில இடங்களில் மும்முனைப் போட்டிகளையும் எதிர்நோக்குவர்.
நிபோங் தெபால் எம்பியும் மாநில பிகேஆர் தலைவருமான மன்சூர் ஒஸ்மானை எதிர்த்து சுங்கை பக்காப் சட்டமன்ற உறுப்பினர் மக்தார் ஷாபியும் இன்னொரு இந்தியரும் போட்டி இடுகின்றனர்.
பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்சின், பாயான் பாரு தலைவர் பதவிக்காக, துணை முதலமைச்சரும் பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினருமான ரஷிட் முகம்மட் ஹஸ்னோனுக்கு எதிராகக் களமிறங்குகிறார்.
பிகேஆர், எதிர்காலத்துக்கான கட்சி என்பதால்தான் இவ்வளவு போட்டி என்கிறார் மன்சூர்.
“சிலர் இது(தீவிர போட்டி) கட்சிக்கு நல்லதல்ல என்று நினைக்கலாம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அனைவரும் ஒன்றுபடுவர் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த அளவுக்கு உறுப்பினரிடையேயும் தலைவர்களிடையேயும் அரசியல் முதிர்ச்சி உள்ளது”, என்றாரவர்.