மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம், பெய்ஜிங் செல்லும் பயணத்தின்போது பாதைமாறிச் சென்று பின்னர் எந்தத் தடயமுமின்றி மறைந்துபோய் இன்றுடன் 44 நாள்கள் ஆகின்றன.
விமானத்தை அல்லது அதன் பகுதிகளையாவது கண்டுபிடிக்க 11 விமானங்கள், 12 கப்பல்கள் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் 48,507 சதுர கிலோமீட்டர் கடல்பரப்பை அலசிக் கொண்டிருக்கின்றன.
புளுஃபின்- 21 எனப்படும் குட்டி நீர்மூழ்கிக் கப்பல் கடலடிக்குச் சென்று தேடுகிறது. அது, மெதுவாக செயல்படும் சாதனம் என்பதால் தேடலுக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் பகுதியில் ஒரு பாதியை மட்டும்தான் அதனால் தேடிப் பார்க்க முடிந்திருக்கிறது. அதன் தேடலில் இதுவரை எம்எச் பற்றிய எந்தத் தடயமும் சிக்கவில்லை.
எஞ்சியுள்ள பகுதியிலும் தேடிப்பார்க்க புளுஃபின்-21, எட்டாவது பயணத்தை மேற்கொண்டு இன்று மீண்டும் கடலடிக்குச் சென்றுள்ளதாகக் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் கூறிற்று.
அது, இரண்டாவது ‘பிங்’ ஒலி கேட்கப்பட்ட இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தேடிப் பார்க்கும் என அம்மையம் மேலும் தெரிவித்தது.