அரசாங்கம் எதை மறைக்கிறது? மீண்டும் வினவுகிறார் அன்வார்

anwஎம்எச்370 விவகாரத்தில்  அரசாங்கம்  எதையோ  மூடிமறைப்பதாக  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தொடர்ந்து  குறைகூறி  வருகிறார்.

அப்படிச்  சொல்லிச்  சொல்லியே  அவர்  அரசியல் லாபம் தேட  முயல்வதாக அரசாங்க  அதிகாரிகள்  குற்றம்சாட்டியபோதும்  அன்வார்  விடாமல்  அதைச் சொல்லிக்  கொண்டே  இருக்கிறார்.

“எவ்வளவு  காலத்துக்குத்தான்  தகவலை  வெளியில்  சொல்லாமல்  வைத்துக்கொள்ளப்  போகிறார்கள்? எதற்குப்  பயப்படுகிறார்கள்?”,  என்று  அன்வார்  நேற்றிரவு  ஈப்போ  ரீபோர்மாசி  பேரணியிலும்  அதே கேள்வியை   மீண்டும்  தொடுத்தார். .

“எது  திருடப்பட்டது, எது  சீனாவுக்குக்  கொண்டு  செல்லப்பட்டது? (பிரதமர்) நஜிப்  அப்துல்  ரசாக்,  தயவு  செய்து  சொல்ல  வேண்டும்”, என்றவர்  கேட்டுக்கொண்டதாக  பிகேஆர்  கட்சி  நாளேடான  கெஅடிலான்  கூறிற்று.

பெய்ஜிங்  சென்ற  அவ்விமானத்தில்  கொண்டுசெல்லப்பட்ட  சரக்குகளின்  பட்டியல்  வெளியிடப்பட  வேண்டும்  என்பதையே  அவர்  அவ்வாறு  குறிப்பிட்டார்.

எம்ஏஎஸ்  இதுவரை,  அதில்  நான்கு டன்  வங்குஸ்தான்  பழமும் 200கிலோ கிராம்  lithium-ion  மின்கலங்களும் ஏற்றிச்  செல்லப்பட்டதை  மட்டுமே வெளியில்  தெரிவித்துள்ளது.

முழு  சரக்குப்  பட்டியலை  வெளியிட  அது  மறுத்து விட்டது.  கேட்டால்  விசாரணை  நடப்பதைச்  சுட்டிக்காட்டுகிறது.