ஜாஹிட்டுக்குப் பாராட்டு, நஜிப்புக்குக் குட்டு

kadirமுஸ்லிம்- அல்லாதாருக்குச்  சமவாய்ப்புகள்  வழங்காவிட்டால்  மலேசியாவால்  வெற்றிபெற  இயலாது  என்று  அமெரிக்க  அதிபர் பராக்  ஒபாமா  குறிப்பிட்டதற்கு  மறுப்புத்  தெரிவித்து  அறிக்கை  விடுத்த  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியை  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  முன்னாள்  தலைமை செய்திஆசிரியர் ஏ.காடிர்  ஜாசின் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க  அதிபரின்  கூற்று  மலேசிய  உள்விவகாரங்களில்  “தலையிடுவதாகவும்  சினமூட்டுவதாகவும் உள்ளது”  என்றவர்  கடிந்து  கொண்டார். அதற்குப்  பதிலடி  கொடுத்த  ஜாஹிட்  ஹமிடியை  அவர்  பாராட்டினார்.

“சபாஷ் ஜாஹிட். அம்னோ  பேராளர்கள்  கடந்த  கட்சித்  தேர்தலில்  மிக  அதிகமான  வாக்குகளில்  உங்களை   உதவித்  தலைவராக  தேர்ந்தெடுத்தது  வீண்போகவில்லை”,  என்றாரவர்.

அதே  வேளையில்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  அவர்  இடித்துரைத்தார். இந்தச்  சினமூட்டும்  பேச்சைக்  கேட்டு முஸ்லிம்கள்  “ஒருவர்  அவருடன் (ஒபாமாவுடன்)   அவரின்  காரில்  ஒன்றாக  பயணித்ததை  நினைத்து  மகிழ்ந்து போயிருக்கிறார் என்பதற்காகவோ  அவரைப் பாராட்டிப்  பேசினார்  என்பதற்காகவோ”  வாயை  மூடிக்கொண்டு  இருக்கப்போகிறார்களா  என்றும்  அவர்  வினவினார்

காடிர்  இப்போதெல்லாம்  பிரதமரைக்  குறைகூறுவதிலேயே  குறியாய்  இருப்பதுபோல்  தெரிகிறது. அம்னோவில்  உள்ள  சிலருடன்  கைகோத்து  நஜிப்பை  வெளியேற்ற  அவர்  சதி செய்கிறார்  என்றுகூட  ஒரு  குற்றச்சாட்டு  உண்டு.