கிடெக்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசும் காலிட்டுக்குக் கண்டனம்

kidexசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம், சர்ச்சைக்குரிய  கின்ராரா- டமன்சாரா விரைவுச்சாலை(கிடெக்ஸ்)  விவகாரத்தில் மக்களின்  நலனைவிட  நிறுவனத்தின்  நலனுக்கே  முன்னுரிமை  அளிப்பதாக  சாடப்பட்டிருக்கிறார்.

“காலிட்  இப்ராகிமின்  நிலைப்பாடு  வருத்தமளிக்கிறது. மாநில  அரசு  செய்யும் எல்லா  முடிவுகளும்  சிலாங்கூர் மக்களுக்கு  நன்மை  செய்வதாக  இருத்தல்  வேண்டும்.

“அப்படிச்  செய்யும்போது  நிறுவனங்களின்  ஆதாயம்- நோக்கம்  கொண்ட  நலன்கள்  சில  வேளைகளில்  பாதிக்கப்படலாம்”,  என  சட்டமன்ற  உறுப்பினர்களான  ராஜிவ்  ரிஷ்யகரன்( புக்கிட்  காசிங்),  இயோ  பீ இன் (டமன்சாரா  உத்தாமா), இங்  ஸ்சே  ஹன் (கின்ராரா)  ஆகியோர்  ஒரு  கூட்டறிக்கையில்  கூறினர்.

காலிட்  நேற்று,  பொதுமக்கள்  எதிர்க்கிறார்கள்  என்பதற்காக  ரிம2.42பில்லியன்  திட்டத்தை  ஒதுக்கித்தள்ளுவது  “அந்த  நிறுவனத்துக்கு  நியாயம்  செய்வதாக  இருக்காது”  என்று கூறி இருந்தது  குறித்து  அம்மூவரும்  இவ்வாறு  கருத்துத்  தெரிவித்தனர்.