நஜிப்: இலவச நீர் கொள்கைதான் சிலாங்கூரில் நீர்ப் பங்கீட்டுக்கு இட்டுச் சென்றது

najibபிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக், சிலாங்கூரின்  நீர்ப் பங்கீட்டுக்குக்  காரணம்  பக்காத்தான்  ரக்யாட்  கொள்கைதான்  என்று  கூறியுள்ளார்.

மசீச  உறுப்பினர்களும்  சீன  என்ஜிஓகள்,  சீன  அமைப்புகள்  ஆகியவற்றின்  பிரதிநிதிகளும் கலந்து  கொண்ட  ஒரு  கூட்டத்தில்  பேசிய  நஜிப், “எத்தனை  பேர்  நீர்ப்  பங்கீட்டால்  பாதிக்கப்பட்டீர்கள். நீர்ப்  பங்கீட்டால்  எத்தனை  தொழில்  அதிபர்களின்  திட்டங்கள்  அங்கீகரிக்கப்படாமல்  கிடக்கின்றன?”, எனக்  கூட்டத்தினரை  நோக்கிக்  கேட்டார்.

“ஏன்?  ஏனென்றால், எதிரணியினர்  வெகுமக்கள்  ஆதரவைப்  பெறும்  முயற்சியாக  இலவச  நீர்  அளிக்க  முனைந்தனர்,  குடிநீர்  கட்டணத்தைச்  சிறிதளவும்  உயர்த்த  மறுத்தனர்”.

இலவச  நீர்  விநியோகம்தான்  அம்மாநிலத்தில்  நீர்  தட்டுப்பாட்டுக்கு  இட்டுச்  சென்றதாக  அவர்  கூறினார்..

சில  மாதங்களாக  மழை  பொய்த்து  விட்டதால்  சிலாங்கூர்  அணைக்கட்டுகளில்  நீர் மட்டம்  மிகவும்  குறைந்து  போனது. அதன் விளைவாக  மார்ச்,  ஏப்ரல்  மாதங்களில்  அங்கு  நீர்ப்  பங்கீடு  அமலுக்கு  வந்தது.

வறட்சி  நிலையால்  பாதிக்கப்பட்டது  சிலாங்கூர்  மட்டுமல்ல. பேராக்,  நெகிரி  செம்பிலான்,  ஜோகூர்  முதலிய  மாநிலங்களும்கூட   பாதிக்கப்பட்டன. அங்கும்  நீர்ப்  பங்கீடு  நடைமுறைப்படுத்தப்பட்டது.

கெடா,  மலாக்கா,  பினாங்கு  ஆகியவையும்  நீர்ப் பங்கீடு  செய்வது  பற்றி  ஆலோசித்தன.  ஆனாலும்,  அதைச்  செயல்படுத்தாமல்  சமாளித்துக்  கொண்டிருக்கின்றன.