அரசாங்க ஊழியர், ஆமாம் சாமி போடனும்! அதுதான் புரட்சிக்கு வழியாகும்!

GST 1தமிழினி. மே, முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணி உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்திருப்பது குமட்டலை உருவாக்குகிறது.

அந்த எச்சரிக்கை அரசாங்கத்தின் திவாலான சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. நாட்டையும் மக்களையும் இணைப்பதுதான் அரசாங்கம். அரசாங்க கொள்கைகளை வகுப்பவர்கள் நடப்பு அரசியலை நடத்தும் அரசியல்வாதிகள். அவர்களது கொள்கைகளை அரசாங்கம் அமுலாக்கம் செய்யும். அந்த அமுலாக்கத்தில் பணி செய்யும் ஊழியர்கள் அவர்களதுப் பணியைச் சட்டங்களுக்கு ஏற்ப முறையாக செய்ய  வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கு அவர்கள் அடிபணியத் தேவையில்லை. அடிபணிய வேண்டும் என்ற அரசாங்க வரையறைகள் சனநாயக நடைமுறைக்கு முரண்பாடானவையாகும்.

அரசு ஊழியர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் நாட்டு மக்களில் ஓர் அங்கம் தானே! உதாரணமாக, இவர்களுக்குத் தேர்தலின் போது வாக்களிக்கும் உரிமை உண்டு. அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் சுயத் தேர்வாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் இந்த  பொருள், சேவை வரியால் கூடுதல் சுமையைச் சுமக்கப் போகின்றனர். இதில் அரசு ஊழியர்களை மிரட்டுவது அரசாங்கத்தை சர்வதிகாரத்திற்கு மாற்ற மேற்கொள்ளும் முயற்சியாக கருதப்படும்.

ஆனால் அதே வேலை, அரசாங்க ரகசியங்களையும் அல்லது அதன் முக்கிய கொள்கைகளையும் பாதுகாக்கும் பொருப்பு அதில் பங்கு கொள்ளும் குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு உண்டு. அதற்கான சட்டங்களும் உண்டு. ஆனால், பயத்தை உண்டு செய்து அனைத்து அரசு ஊழியர்களையும் அடிபணிய வேண்டும் என  நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

அந்த சூழ்நிலைக்கு நாடு சென்றால், மக்கள் சனநாயகத்தை மதிக்க மாட்டார்கள். பிறகு புரட்சிதான் வழிமுறையாகும்.