புக்கிட் குளுகோர் இடைத்தேர்தல்: நால்வர் போட்டியிடுகின்றனர்

 

BKglugor-Ramgopal nomination dayபுக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளான இன்று பினாங்கு தேவான் ஸ்ரீ பினாங்கில் வேட்பாளர் நியமன நடவடிக்கை காலை மணி 9.00 க்கு தொடங்கியது.

காலஞ்சென்ற கர்பால் சிங் இத்தொகுதியை மூன்று தவணைக்கு தம் வசம் வைத்திருந்தார். காலியான இத்தொகுதியில் போட்டியிட ஐவர் விருப்பம் தெரிவித்திருந்தனர். ராம்கோபால் சிங் (டிஎபி), ஹுவான் செங் குவான் (PCM) மற்றும் 3 சுயேட்சைகளான முகமட் நலி பக்ஸ், யாகோப் நூர் மற்றும் அப்துல் பாகார் சீடெக் ஆகியோரே அந்த ஐவரும்.

மசீச போட்டியில் இறங்க முன்வரவில்லை. இருந்தாலும் பிஎன் ஆதரவு வேட்பாளர் போட்டியிடக்கூடும் என்று அம்னோ தலைவர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

காலை மணி 9.00 லிருந்து 10.00 வரையில் வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காலை மணி 10.45 க்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அசிஸ் வேட்பாளர் நியமனம் மிக சுமுகமாக நடைபெற்றதாக கூறினார்.

“ஐந்து வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு சுயேட்சை வேட்பாளரின் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வைப்புத் தொகையைக் கட்ட தவறி விட்டார். ஆகவே, இது நான்கு முனைப் போட்டியாகும்”, என்று தேர்தல் ஆனையத் தலைவர் தெரிவித்தார்.

சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவரான லிம் சீ கூன் நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆணைய அதிகாரி அனுவார் யஹயா போட்டியிடுவதற்கு தகுதி பெற்ற நால்வரின் பெயரை அறிவித்தார்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்: ராம்கோபால் சிங், ஹுவான் செங் குவான், முகமட் நபி பக்ஸ் மற்றும் அபு பாக்கார் செடெக் முகம்மட் ஸான் ஆகியோரே அந்த நால்வர்.

வாக்களிப்பு மே 25 இல் நடைபெறும்.